150. இந்திய பிரதமருக்கு ஒரு கண்ணீர் கடிதம்

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்ம்ற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என்று வள்ளுவரால் தனி அதிகாரம் அமைக்கப்பட்டு, பெரிதும் புகழப்பட்டு, உலகத்துக்கே சோறுடைத்துக்கொண்டு இருக்கும் இந்திய உழவுத்தொழிலின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

கிரிக்கெட்டில் ஒரு மேட்சில் தோற்றால் அவை நடவடிக்கைகளை தள்ளி வைத்து அதை பற்றி விவாதம் செய்யத்துடிக்கும் நம்ம எம்.பிகள், மந்திரிகள் ஆயிறக்கணக்கான விவசாயிகள் மடிவதை பற்றி மூச்சு கூட விடவில்லை. அதிலும் நம்ம மானம் கெட்ட விவசாய மந்திரி சரத்பவார் சிறிது கூட ஈவு இரக்கம் இன்றி பட்டினியால் தற்கொலை செய்யும் விவசாயிகளை குடித்துவிட்டு இறக்கின்றனர் என்று நக்கல் அடிக்கிறார். கிரிக்கெட், IT தொழிலுக்கு அளித்துவரும் முக்கியத்துவங்களில் 10% கூட விவசாயத்திற்கு அளிக்கப்படாதது வேதனையே.

வளர்ந்த நாடுகளில் விவசாயத்திற்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன ஆனால் வளர்ச்சி அடைகின்ற நாடுகளில் விவசாயத்திற்கு அளிக்கப்படும் சலுகைகளை குறைக்க வளர்ந்த நாடுகள் பெருமளவில் முயற்சி செய்து வருகின்றன (இது வரையில் இந்தியா இந்த உடன்பாட்டிற்கு உடன்படவில்லை ஆனால் இந்த நிலை எதுவரையில் என்று சொல்வதற்கு இல்லை.).

இந்திய விவசாயிகள் இந்திய அரசு மற்றும் விஞ்ஞானிகளின் தவறான பசுமை புரட்சி கொள்கைகளால் இன்று மிகவும் பரிதாபத்துக்குறிய நிலையை அடைந்து உள்ளனர். இருக்கும் கஷ்டங்கள் போதாது என்று நம் அரசு இரண்டாவது பசுமை புரட்சிக்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. இந்த குமுறல்களை ஒரு பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதமாக விகடனில் வெளியிட்டு உள்ளனர். மனதை கனக்கச்செய்யும் வகையில் உள்ளது இந்த கடிதம்.

டிசம்பர்23ம் தேதியை விவசாயிகள் தினமாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதையட்டி சிறப்புக் கட்டுரையாக இங்கே மலர்கிறது பாரதப் பிரதமருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

ஐயா, இரண்டாம் பசுமைப் புரட்சி, இரண்டாம் பசுமைப் புரட்சின்னு நீங்க இப்ப சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க. அதைக் கேக்கறப்பவெல்லாம் எங்க மனசு பக்பக்னு அடிச்சுக்குதுங்கய்யா!

காட்டுமேட்டுல ஆடு, மாடு மேய்ச் சுக்கிட்டு, வெந்ததைத் தின்போம். விதி வந்தா சாவோம்னு காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்த எங்க மனசுல, முப்பது, நாப்பது வருஷத்துக்கு முன்ன இப்படித் தான் பசுமைப் புரட்சினு ஆசைய விதைச்சாங்க. கலப்பு உரம்… கலக்காத யூரியானு அள்ளிவிட்டாங்க. அப்புறமா டிராக்டர்… கருது அடிக்க மெஷினு… களை எடுக்க மெஷினு… அப்படினு கடனை எங்க தலைமேல கட்டினாங்க. கவருமென்ட்டு கடன்தானேனு கணக்கு வழக்கு இல்லாம நாங்களும் வாங்கிப் போட்டோமுங்க. அப்புறம் அடி உரம், மேல் உரம் போட பணம் இல்லீங்க. அதுக்குக் கந்து வட்டிக் காரன்கிட்ட போனோமுங்க. கரும்பு, நெல்லு, கோதுமைனு விதைச்சி… ஆடு, கோழி வளர்த்து… 100 மில்லியன் டன்னு பத்தாக்குறையா இருந்த உணவு தானிய உற்பத்தியை 200 மில்லியன் டன்னா விளைச்சுக் குமிச்சிட்டோம். உணவுப் பஞ்சமும் போச்சுங்க. ஆனா, விலை வீழ்ச்சி எங்களை வீழ்த்திடுச்சுங் கய்யா!

விவசாயி, கடன ஒடன வாங்கிக் கரும்பு போட்டானுங்களா..? கரும்பு மில் முதலாளி, காரு பங்களானு பறக்கறாங்க! கடன வாங்கி, நெல்லு போட்டானுங்களா..? அரிசி ஆலை முதலாளி வந்து அறுவடை செஞ்சுக் கிட்டு போயிட்டாருங்க! பருத்தி பொதி பொதியா விளைஞ்சுதுங்க… பஞ்சாலை முதலாளிங்க, ஜவுளிக்கடை அதிபருங்க, பூச்சி மருந்து வித்த கம்பெனி முதலாளிங்க எல்லாம் சுகமா வாழ ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, விவசாயி வில் வண்டிக்குக் கூட வக்கில்லாம வீதியோரத்துல முடங்கிட்டானுங்க.

அடுத்ததா, மருந்துச் செலவே இல்லாத பி.டி. பருத்தினு ஏதேதோ சொல்லி எங்க கையைப் பிடித்து இழுத்துவிட்டாங்க. அரசாங்கமே சிபாரிசு பண்ணதால எங்க ஜனங்களும் கண்ணு மண்ணு தெரியாம கடன் வாங்கி அந்த பி.டி. பருத்திய நடவு போட்டாங்க. பணக்காரனாகப் போற கனவுல, எல்லைகளைத் தாண்டி ஆகாயத்துல பறந்தாங்க. கடைசியில என்னாச்சு..? பணத்த எண்ணுறதைவிட, இப்பப் பொணத்ததானுங்க பருத்தி விவசாயிங்க அதிகமா எண்ணிக்கிட்டு இருக்காங்க.

ஐயா… நீங்களும், எங்க ஜனங்க சாவுறதப் பார்த்து இரக்கப்பட்டு, 17,000 கோடிக்கு ‘சாவு நிவாரண ஃபண்ட்’ கொடுக்கறதா சொன்னீங்க. இருந்தாலும் சாவு மட்டும் நின்னபாடு இல்லீங்க. செத்தவன் மூக்குல சுக்க வச்சு ஊதுறதுல என்னங்க பிரயோ சனம்..? உசுரோடு இருக்கும்போதே கொஞ்சம் உதவிக்கு வந்திருக்கலா முங்க. ஏழை சொல் அம்பலம் ஏறுமா? இருந்தாலும், கஷ்டம் வரும் போது கல்லுகிட்டயாவது சொல்லி அழுதா, கொஞ்சம் மனசு ஆறும்னு எங்க பாட்டி சொல்லுமுங்க. அதான், சொல்லி அழறோமுங்க!

ஒரு காலத்துல, தேசிய வருமானத் திலே 55 சதவிகிதமா இருந்த ஜி.டி.பி. (GDP), உங்க முன்னோடிங்க கொண்டுவந்த பசுமைப் புரட்சியால இப்ப 18 சதவிகிதமா நல்லாவே வளர்ந்து கிடக்குதுங்க. எப்படி இருந்த நாங்க… இப்படி ஆகிட்டோம்ன்னு நடிகர் விவேக் கணக்கா அரசுகிட்டே சொல்லிப் பாத்தோமுங்க. சோகம் தீரலீங்க. எங்கள்ல சிலர் விஷத்தைக் குடிச்சுட்டு பாடையில போன பிறகுதாங்க, அரசின் கும்பகர்ணத் தூக்கம் கொஞ்சம் போல கலைஞ்சுதுங்க.

‘வரித் திலகம்’ நிதி மந்திரி சிதம்பரம் கூட இந்த தடவை கொஞ்சம் இறங்கி வந்து, எங்க மேல கருணைப் பார்வை பார்த்து இருக்காரு. விவசாயிகள் வீட்டுல வக்கிரமெடுத்த சனி உட் கார்ந்து 9 வருஷம் ஆகிடுச்சு. ஒரே நாள்ல அதை விரட்ட நான் ஒண்ணும் அனுமான் இல்லீங்களேன்னு கேட்டிருக்கார். எப்படியோ, சனி இருக்குங்கிறதை ஒப்புக்கிட்டாரே!

ஆனா பாருங்க, குடிச்சுட்டுச் சாகுற வனையெல்லாம் குடியானவன்னு கணக்குல சேர்க்கக் கூடாதுன்னு குறும்பு பேசறாரு விவசாய மந்திரி சரத் பவாரு. தென் ஆப்பிரிக்காவுல நடந்த கிரிக்கெட் போட்டியில இந்தியா தோத்துப்போச்சுனு கண்ணீர் வடிக்கிறவர், அவரோட மகராஷ்டிர மாநிலம் விதர்பாவுல பருத்தி விவசாயிகள் கொத்துக் கொத்தா தற்கொலை பண்ணிக்கிறதை நினைச்சுக்கூடப் பார்க்க மாட்டேங்குறாரு.

அசின் கால்ல ஆணி குத்தினாக் கூட நாலு பத்தியிலே செய்தியைப் போட்டு நன்றியைக் காட்டிக்கிறாங்க. பாழாப்போன இந்த நாட்டின் முதுகெலும்பு செத்தாக்க, ஒரு மூலையிலே, ஒரு பத்தியிலே சின்னச் செய்தியா போட்டுக் கடமையைக் கச்சிதமா முடிச்சுடுறாங்க.

இவனுங்க என்னதான் சொல்ல வர்றானுங்க. விவசாயத்தையே விட்டொழிச்சுட்டு வேற வேலையைக் கொடுங்கனு கேக்கறானுங்களா?ன்னு குழம்ப வேண்டாம். ‘உங்க மந்திரி சபையில ஒரு வேலை போட்டுக் கொடுத்தீங்கனா, லஞ்சம் கிஞ்சம் வாங்கி மில்லியனர் ஆகிக்கிறோம்’னு குதர்க்கமா எதையும் கேக்கல. எங்க வயித்துப்பாட்டுக்கு நொண்டி மாடும், குட்டக் கலப்பையும் இருக்குதுங்க! அது போதுமுங்க. விவசாயம் செஞ்சே பொழைச்சுக்குவோம்!

அந்தக் காலத்துல, எங்க பாட்டன் பூட்டனெல்லாம் மீசையை முறுக்கிக் கிட்டு வயல் வரப்புல நடந்து போனா சோறுபோடும் மவராசன் போறான் பாருனு, பார்க்குற சனமெல்லாம் கையெடுத்துக் கும்பிடும். கன்னத்திலேயும் போட்டுக்குவாங்க. பெரு மையா இருக்கும். இப்ப என்னடான்னா, கால் காசுக்குப் பொறாதவனெல்லாம் Ôகடன்காரன் போறான் பாரு… கடன் கட்டாதவனுக்கு உதட்டு மேல மீசை எதுக்கு?ன்னு எகத்தாளம் பேசறானுங் கய்யா. நாண்டுக்கிட்டு சாகலாம்னு தோணுதுங்கய்யா!

‘நிலம் என்பது விவசாயிகளுக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அல்ல… அதன் வரப்புகள் விவசாயி களின் கரங்களிலே பூட்டப்பட்டு இருக்கும் விலங்கு’னு சமூக விஞ்ஞானி காரல் மார்க்ஸ் அப்பவே சொன்னா ருங்க. நாங்க அதக் கேக்கலீங்க. விவசாயிகள் இந்நாட்டின் முதுகெலும்புன்னு நம்ம ஊரு அரசியல்வாதிகள், ஊருக்கு ஊரு கூப்பாடு போட்டதைக் கேட்டு மயங்கிட்டோமுங்க. இன்னிக்கு இந்தியாவின் முதுகெலும்பு முறிஞ்சு போச்சுங்க. முதுகெலும்பு முறிஞ்ச இந்திய விவசாயியைத் தூக்கி குப்பையில போடு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதுகெலும்பு நல்லா இருக்குது. அரிசி, பருப்பு, கோதுமை கொடுக் கிறோம்ன்னு அவங்க சொல்றாங்க. வாங்கிக்கிட்டா போச்சுனு கூச்ச நாச்ச மில்லாம சொல்லலாம்யா! ஆனா, 70 கோடி விவசாயிகளைக் கொன்னுப் புட்டு எந்த நாட்டை முன்னேத்தப் போறீங்க?!

நல்லா இருந்தவன் வாழ்க்கையில கடன் எப்படி வந்துச்சு? எப்படியோ… அரசு போட்ட திட்டத்திலே கோளாறு ஆகிப் போயிடுச்சு. பசுமைப் புரட்சின்னு குண்டைத் தூக்கி போட்டு, எங்க கிராமத்தையே கொன்னுப்புட்டாங் கய்யா! வாழ்க்கையை வயல்ல தொலைச் சுட்டு, நகரத்துத் தெருக்கள்ல, வீதி ஓரங்கள்ல நடைமேடைகள்ல… அரை வயித்துக் கஞ்சிக்கு ஆலாப் பறக்குறாங் கய்யா. விவசாயம் மட்டும் பசுமையா மாறினா போதாதுங்கய்யா… விவசாயி களின் வாழ்க்கையும் பசுமையா மலர்ந்தாதானுங்களே, அது உண்மையான பசுமைப் புரட்சி! அதனாலதானுங்க, நீங்க இரண்டாவது பசுமைப் புரட்சின்னு சொன்னதும், இதயத்துல இடி இறங்கினது மாதிரி துடிச்சுப் போயிட்டோமுங்க.

முதல் பசுமைப் புரட்சி இந்திய பூமியையே பொட்டல் காடா மாத்திக்கிட்டு இருக்குதுங்கய்யா. 20 வருஷங்களுக்கு முன்னால கண்ட விளைச்சல், இப்போ எவ்வளவு உரம், உப்பு, யூரியா கூட்டினாலும் கிடைக்கலீங்க. ஏன் கிடைக்கலேனு மண்ணைப் பரிசோதிச்சிப் பார்த் ததுல மண்ணுல உயிர் இல்லைனு சொல்றாங்க. மண்ணுக்கு மரண தண்டனை கொடுத்துட்டீங்க. உங்க மண்ணு செத்துப்போச்சு. திரும்பவும் பிழைக்க வைக்கணும்னா… தழை தாம்பு, மாட்டுச்சாணி, ஆட்டுப் புழுக்கையைப் போட்டாகணும்ன்னு மண் வைத்தியருங்க சொல்றாங்க. எழவு விழுந்த வீடு போல, எங்க சனங்க என்ன செய்றதுனு தெரியாம கிடக்கறாங்க.

இந்த நேரத்துல… நீங்க வேற சும்மா இருக்காம இம்சை அரசனா மாறி, இரண்டாம் பசுமைப் புரட்சின்னு கூப்பாடு போடறீங்க. கையெடுத்துக் கும்பிடுறோமுங்க… உங்க உலகமயமாக்கும் பேராசையில எங்களைக் கொன்னுப்புடாதீங்க. பூமித் தாயின் கர்ப்பப் பையில விஷத்தைக் கொட்டிப்புடாதீங்க. நம்ம பிள்ளைங்களுக்கும் இந்த பூமியைக் கொஞ்சம் விட்டு வைக்கணுமுங்க.

இந்தியாவோட விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்கூட, இரண்டாவது பசுமைப் புரட்சியைப் பத்தி மவுனத்தைதான் பதிலா கொடுக்கறாரு. இனிமே விவசாயி களுக்காக ஐந்தாண்டுத் திட்டத்தைப் போடுங்கன்னு சொல்லியிருக்காரு. அதையும் மனசுல வெச்சுக்கங்க.

நன்றிங்கய்யா! ” — நன்றி விகடன்.

உலகமயமாக்கல் என்ற போதையில் தொடர்ந்து services sectorகளிலேயே நம் அரசு கவனம் செலுத்திவந்தால் (இன்றைக்கும் இந்தியா கொடுப்பதை விட குறைந்த செலவில் வேறு ஏதாவது ஒரு நாடு இந்த சர்வீஸ்களை கொடுத்தால் இந்த கம்பெனிகள் நம்ம ஊரில் கட்டிய கடையை சாத்திவிட்டு அங்க திறந்து விடுவார்கள்.) இந்த பொருளாதார வீக்கம் என்றாவது ஒரு நாள் வெடித்து அர்ஜென்டினாவில் சில வருடங்களுக்கு முன் ஏறபட்டது போன்ற ஒரு நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் நாள் தொலைவில் இல்லை. அப்பொழுது சொந்த நாட்டில் பொருட்களை விளைவிக்கவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள் அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பணமும் இருக்காது எல்லாம் சாக வேண்டியது தான்.

விவசாய கடன் தள்ளுபடி, நிவாரண உதவி என்று குறுகிய கால வோட்டு வேட்டை சாகசங்களை விட்டு விவசாயிகளின் நீண்ட கால நன்மையை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பிரதம்ரோ, நம்ம ஜனாதிபதியோ, முதல்வர் கலைஞரோ (பேரன் மீது காட்டும் அக்கறையில் சிறிய அளவு இதில் காட்டினால் போதும்.) இந்த விஷயத்தில் அக்கரை எடுத்து செயல் பட்டாவிட்டால் இந்தியாவில் விவசாயிகள் என்று ஒரு வர்க்கமே இல்லாமல் போய்விடும்.

12 Comments

  1. 1
    Thekkikattan Says:

    சந்தோஷ்,

    இதேத்தான், நான் என்னுடைய பல கட்டுரைகளில் எழுதி புலம்பியிருக்கிறேன். இயற்கைநேசியிலும் சரி, தெக்கிக்காட்டானிலும் சரி.

    இதன் தீவிரத்தை நாம் முற்றிலும் அந்த மண்ணின் பண்புகளை தொலைத்த பிறகுதான் உணர்வோமென்ற்றால், நோய் முற்றிய பிறகு வைத்தியதியரைத் தேடித் திரிவதற்குச் சமம்தான்.

    எப்படியே இது போன்ற கட்டுரைகள் அடிக்கடி இது போன்ற ஊடகங்களில் பதிபிக்கப் பட்டு விழிப்புணர்வு வேற்றுவது மிக்க அவசியம்.

    இதனை இங்கு கொணர்ந்தற்கு ஒர் நன்றியும், வுமது கருத்துக்களை உள்ளே இணைத்ததற்கு வாழ்த்துக்களும்…

    //உலகமயமாக்கல் என்ற போதையில் தொடர்ந்து services sectorகளிலேயே நம் அரசு கவனம் செலுத்திவந்தால் (இன்றைக்கும் இந்தியா கொடுப்பதை விட குறைந்த செலவில் வேறு ஏதாவது ஒரு நாடு இந்த சர்வீஸ்களை கொடுத்தால் இந்த கம்பெனிகள் நம்ம ஊரில் கட்டிய கடையை சாத்திவிட்டு அங்க திறந்து விடுவார்கள்.)//

  2. 2
    Anonymous Says:

    //இது போன்ற கட்டுரைகள் அடிக்கடி ஊடகங்களில் பதிபிக்கப் பட்டு விழிப்புணர்வு வேற்றுவது மிக்க அவசியம்.//

    ஆமாம், அப்படி அடி மேல் அடி அடித்துத் தான்
    அம்மியை நகர்த்தனும்.

    முயற்சி திருவினையாகட்டும். வாழ்த்துக்கள்.

  3. 3
    sree Says:

    சந்தோஷ்,
    ரொம்ப மகிழ்ச்சி,விவசாயிகளின் துயரங்களை பற்றிய செய்திகளை தெரிவித்தமைக்கு நன்றி.இதுதான் நான் எதிர்பார்ப்பது.தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கும் விவசாயிகளை பற்றிய செய்திகளை தெரிவிக்கவும்.நிச்சயம் ஒரு தீர்வு உருவாக இச்செய்திகள் உறுதுணையாய் இருக்கும்.நன்றி.

  4. 4
    குமரன் (Kumaran) Says:

    சந்தோஷ். மிக நல்ல பதிவு. விகடனின் வந்த கடிதம் கண்ணீரை வரவழைத்தது. உங்கள் கருத்துகளும் நன்று.

  5. 5
    சந்தோஷ் aka Santhosh Says:

    வாங்க தெ.கா,
    இயற்கை சம்மந்தமா நீங்க நிறைய சொல்லி இருக்கிங்க. இப்ப சமீபகாலமா ஊடகங்களும் நிறைய இது பற்றி
    சொல்லிட்டு வராங்க பார்க்கலாம், நான் படித்துக்கொண்டு இருக்கும் வரையில் இப்பொழுதே Its too late என்று உணர்கிறேன்.

    உங்க கருத்துக்கு நன்றி அனானி.
    இது ஒண்ணும் உள்குத்து/அரசியல் பதிவு இல்லையே உங்க பெயரை வெளியிட்டு
    இருந்தால் மகிழ்ந்து இருப்பேன்.

  6. 6
    சந்தோஷ் aka Santhosh Says:

    உங்களின் முதல் வருகை இது என்று நினைக்கிறேன் shree, என்னால் முடிந்த வரையில் இது மாதிரியான
    செய்திகளை தர முயற்சி செய்கிறேன். உங்க பக்கங்களை பார்த்தேன் கிராமங்களின் தேவைகள் குறித்து நல்ல எழுதி இருக்கீங்க.

    வாங்க குமரன்,
    முதலில் இது 150 ஆவது பதிவாச்சே ஏதாவது நகைச்சுவை பதிவா போடலாம் என்று தான் இருந்தே. விகடனில் இதை
    படித்த பொழுது மனசு மிகவும் கனத்து விட்டது எனவே உடனே அதை பதிவாக்கி விட்டேன். ஊதுகிற சங்கை ஊதுவோம்
    இல்லாட்டி இயற்கை நமக்கு சங்கு ஊதும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  7. 7
    கவிதா|Kavitha Says:

    //ஊதுகிற சங்கை ஊதுவோம்
    இல்லாட்டி இயற்கை நமக்கு சங்கு ஊதும் காலம் வெகு தொலைவில் இல்லை. //

    Well said !! சேற்றில் அவர்கள் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணரவேண்டும்.. நல்ல பதிவு..கொடுத்ததற்கு நன்றி.

    உங்களின் 150 பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!

  8. 8
    செல்வன் Says:

    சந்தோஷ்

    நல்ல பதிவு. விவசாயிகளின் பிரச்சனைகளை சொன்ன பகுதி மிக உனர்ச்சிகரமாக இருந்தது. எந்த தீர்வும் சொல்லாதது ஒரு பலவீனம் எனினும் கட்டுரையின் நடை அதை மறக்கடித்து விடுகிறது.

  9. 9
    லொடுக்கு Says:

    நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு சந்தோஷ்.

  10. 10
    சீனு Says:

    //நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு சந்தோஷ்.//
    Yes!

    For a change, konjam serious-a pathivu pottirukka pola…

  11. 11
    சந்தோஷ் aka Santhosh Says:

    //நம்ம கவிதா என்ன சொல்றாருன்னா

    //ஊதுகிற சங்கை ஊதுவோம்
    இல்லாட்டி இயற்கை நமக்கு சங்கு ஊதும் காலம் வெகு தொலைவில் இல்லை. //

    Well said !! சேற்றில் அவர்கள் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணரவேண்டும்.. நல்ல பதிவு..கொடுத்ததற்கு நன்றி.

    உங்களின் 150 பதிவுக்கு வாழ்த்துக்கள் !!! //

    வாழ்த்துக்களுக்கு நன்றி கவிதா.

    ——————————————————————————–

    //நம்ம செல்வன் என்ன சொல்றாருன்னா

    சந்தோஷ்

    நல்ல பதிவு. விவசாயிகளின் பிரச்சனைகளை சொன்ன பகுதி மிக உனர்ச்சிகரமாக இருந்தது. எந்த தீர்வும் சொல்லாதது ஒரு பலவீனம் எனினும் கட்டுரையின் நடை அதை மறக்கடித்து விடுகிறது. //

    எனக்கு தெரிந்த வரையில் இந்த கடிதம் வந்து இரண்டாம் பசுமைபுரட்சி வேண்டாம் என்று சொல்வதும், விவசாயிகளின் கஷ்டங்களை அதிகார வர்கத்துக்கு சொல்வதுமே இதன் நோக்கம்.

  12. 12
    thamili Says:

    //கிரிக்கெட், IT தொழிலுக்கு அளித்துவரும் முக்கியத்துவங்களில் 10% கூட விவசாயத்திற்கு அளிக்கப்படாதது வேதனையே.//

    வேளாண்மை மட்டும் போதும் வேறு தொழில் நுட்பங்கள் தேவையில்லை என்ற முடிவிற்குவர இயலாது.

    உற்பத்தியைப் பெருக்கும் நுட்பத்தை அறிமுகப்படுத்துவதால் இப்பிரச்சினைக்குத் தீர்வு வந்து விடப் போவதில்லை.

    //இன்றைக்கும் இந்தியா கொடுப்பதை விட குறைந்த செலவில் வேறு ஏதாவது ஒரு நாடு இந்த சர்வீஸ்களை கொடுத்தால் இந்த கம்பெனிகள் நம்ம ஊரில் கட்டிய கடையை சாத்திவிட்டு அங்க திறந்து விடுவார்கள்.)//

    :( (((((

    சாத்தியம்தான்!இதை எப்படி சமாளிப்பது என்பதை கண்டறிய வேண்டும்…!


RSS Feed for this entry

Leave a Comment