இந்த பதிவில் நான் சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகளின் வருகை வாடிக்கையாளர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எவ்வித நன்மையும் தராது என்று கூறி இருந்தேன், அதை செல்வனும் சிலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைகழகம் (இந்த ஆய்வின் முடிவுகளை பற்றி சில மாதங்களுக்கு முன்பு Business World ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது, சுட்டி கிடைக்க வில்லை கிடைத்தால் தருகிறேன்.) செய்த ஆய்வில் இது உண்மை என்று நிரூபணம் ஆகி உள்ளது. அவர்களின் ஆய்வின் முடிவுகள் இதோ :1. பெரும் வியாபாரிகள் மற்றவர்களை விட 10% குறைவான விலையையே விவசாயிகளுக்கு அளிக்கின்றனர்.2. அவர்களின் விற்பனை விலையும் சற்று அதிகமாகவே உள்ளது.
3. பெரும் வியாபாரிகள் விரும்பும் பொருட்களை விவசாயிகள் விளைவிக்க சில இடங்களில் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
4. விதைகள், உரங்களின் உபயோகம் வரை அவர்களின் ஆதிக்கம் விவசாயிகளின் மீது உள்ளது.
இதற்கு வியாபாரிகளின் பதிலை கேட்டால் வாயால் சிரிக்க மாட்டீர்கள்:
1. நாங்க விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளோம். — ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது கதையாக, இவர்களின் படிப்பு விவசாயிகளின் அறிவுக்கு கால் தூசுக்கு கூட ஈடாகாது. மேலும் மெத்த படித்த மேதாவிகளின் பேச்சை கேட்டு நாம் மண்ணையும், விளை பொருட்களையும் ஏற்கனவே நஞ்சாக்கிவிட்டோம். போதும் மெத்த படித்த மேதாவிகளின் அறிவுரைகள். இவர்கள் விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்? எப்படியும் இவர்களின் அறிவுரைகள் கம்பெனிகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.
2. நாங்க தரமான electronic scales(எலக்ட்ரானிக் எடை மெஷின்கள்), உபயோகம் செய்து பொருட்களை அளக்கிறோம் – வியாபார பிண்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு இது அடுத்த ஜல்லியாக தெரிகிறது. முன்னாடி எல்லாம் விவசாயிகளை சுலபமாக ஏமாற்றி வந்தனர் ஆனால் இப்பொழுது அவர்கள் கடைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே பொருட்களை எடை போட்டு எடுத்து வருகின்றனர், எடை ஏமாற்றுவது எல்லாம் இப்பொழுது முடியாத காரியம்.3. நாங்க பொருட்களை வாங்கியவுடன் பணத்தை கொடுத்து விடுகிறோம் – எனக்கு தெரிந்த வரையில் சிறு வியாபாரிகள் கூட இதையே தான் செய்கின்றனர். விவசாயிகளிடம் எல்லாம் கடன் சொல்லி பொருட்களை வாங்க முடியாது. பொருளை எடை போட்ட உடன் காசு குடுத்து ஆக வேண்டும்.4. விவசாயிகளின் இடங்களுக்கே சென்று பொருட்களை கொள்முதல் செய்கிறோம் – இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, ஏனெனில் பெரிய விவசாயி என்றால் அவர்களின் இடத்துக்கு சென்று வாங்கலாம் சிறு விவசாயிகளிடமும் இவர்கள் இதை செய்கிறார்கள் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. இந்த ஒரு காரணத்திற்காக 10% விலை குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் கூட இங்கே ரிலையன்ஸ், சுபிக்ஷா, Spencer போன்ற கடைகளில் பொருட்களை வாங்கியவன் என்ற முறையில் சொல்கிறேன், இவர்கள் சொல்வது போல காய்கறி எல்லாம் அவ்வுளவு freshஆக இல்லை, விலையும் சற்று கூடுதல் தான்.அதே போல மெதுவாக இவர்கள் டின்னில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.