Archive for the ‘சுயபுராணம்’ Category

இதெல்லாம் நல்லதுக்கு தானா?

மார்ச் 28, 2012

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

பாய்லரே இல்லாத கடையில 70 பேர் டீ குடிச்சாங்களாமா

திசெம்பர் 8, 2009

நம்ம பதிவை கூகுள் முடக்கிடிச்சே இதுக்கு மேல ரைஸ் சேவை சே தமிழ்சேவை செய்ய முடியாதேன்னு புல் பீலிங்கஸ்ல இருந்தா இன்னைக்கு StatCounter ரிப்போர்ட்டு அனுப்பி இருக்கு. என்னாலயே பாக்க முடியாத என்னோட பதிவை போன வாரம் 70 பேர் பாத்தாங்களாம.. சரியான கூறு கெட்ட குக்கருங்களா இருக்கானுங்க. இவனுங்களை நம்பி நான் வேற அட எதுவும் எழுதாம இம்முட்டு பேர் படிக்கிறாங்களே எதையாச்சும் எழுதுனா இட்லிவடை, லக்கி வகையராக்களை மிஞ்சிடலாமுன்னு ரெண்டு முணு ராத்திரி மல்லாக்க படுத்து கண்ட கனவெல்லாம் வேஸ்டாப்போச்சே..

கூகுளுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன் சினம் கொண்ட இந்த தமிழ்சிங்கத்தை இப்படி முடக்கலாமுன்னு மனப்பால் குடிக்காதிங்க அது உங்க கொம்பனியையே சிதைச்சிடும்.. ஒடம்பெல்லாம் பரவி இருக்கும் மாஸ்டர் பிரைனோடும்,ஒரு தொலைநோக்கு பார்வையோடு தான் சிங்கம் வேர்டு பிரஸ்ஸுலையும் குகையை பார்ம் பண்ணி வெச்சி இருக்கு.. இதுக்கு மேல நீங்களா வந்து கூப்புட வரைக்கும் (ரொம்ப சவுண்டு விடுறேனோ? அய்யா ராசா கூப்பிடுவிங்கில்ல) சிங்கம் இங்க தான் இருக்கும். அப்ப வரட்டா நெக்ஸ்டு வேட்டையில மீட் பண்ணலாம்…

சந்தோஷங்களுடன்
சந்தோஷ்…

ஏழு நாட்களில் முடிந்த 7 1/2

நவம்பர் 20, 2007

இவ்வுளவு தூரம் சொல்லியும், கேக்காம போன வாரம் முழுசும் நம்ம இம்சைக்கு நீங்க எல்லாம் பின்னூட்டம் போட்டு ஊக்கம் குடுத்தீங்க அதுக்கு ரொம்ப நன்றி. நேத்தே இந்த பதிவு போட வேண்டியது ஆனா சில தவிர்க்க முடியாத காரணத்தால போட முடியலை. உங்க ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.

எல்லா பின்னூட்டங்களுக்கும் என்னால பதில்/நன்றி சொல்ல முடியலை. அதுக்கு ஒரு தபா நீங்க மன்னிச்சிகோங்க.

நீங்க எல்லாம் இன்னொரு தபா என்னை மன்னிக்கனும், நான் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடியுது ஆனா பின்னூட்டம் மட்டும் போட முடியலை ஏன்னா பிளாக்கரை எங்க ஆபீசுல தடை செய்துட்டாங்க. பல நல்ல விவாதங்களில் பங்கு பெற முடியாம போகுது. படிக்க முடியாட்டியும் கூட பரவாயில்லிங்க ஆனாலும் முடியும் முடியாதுங்குற மாதிரி படிக்க முடியும் ஆனா பின்னூட்டம் போட முடியாதுங்கிறது ரொம்ப கொடுமைங்க. இன்னிக்கி கூட பாருங்க நம்ம வித்யா கலைவாணி மேடம் அமெரிக்காவை போட்டு தாக்கி இருக்காங்க, கை பர பரங்குது ஆனா பின்னூட்டம் போட முடியலை :(. அதே நிலைமை தான் சில பதிவுகளை சூப்பரா எழுதி இருப்பாங்க பாராட்டலாமுன்னு என்னையும் அறியாம கமெண்டைபோட முயற்சி செய்தால் “இந்த தளம் தடை செய்யப்பட்டுள்ளதுன்னு வரும் :((“. தொடர்ந்து நீங்க எல்லாரும் நீங்க ஆதரவு இதே மாதிரி ஆதரவு தர வேண்டும்.

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா சாமி தமிழ்மண தர்மகத்தாவே, நீங்க ஆள் தெரியாம எனக்கு அனுப்பி இருந்தாலும் பரவாயில்லை இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன், நான் தான் அந்த வாரத்துல நட்சத்திரமா இருப்பேன்னு அவங்க யோசிக்கிறதுக்கு கூட டைம் குடுக்காம கெட்டியா புடிச்சிகிட்டேன். 

அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து என்ன என்னத்தை எல்லாம் எழுதி பெருமை சேர்த்து இருக்காங்க. எனக்கு என்னத்தை தெரியும் சொல்லுங்க, நான் என்னாத்தனு எழுத முடியும்? இருந்தாலும் விடுவோமா?

அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது. பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ரைட்டு விடுங்க, இம்முட்டு சொல்லியும் என் பேச்சை கேக்காட்டி என்ன பண்றது, சோலிய முடிச்சிட வேண்டியது தான், இதுக்கு மேல உங்க தமிழுக்கு என்னால உத்திரவாதம் குடுக்க முடியாது, நம்மளோட அடுத்த மீட்டிங்கு டைரக்டா ரத்த பூமியில தான் வரட்டா.

வீடு எப்படிங்க இருக்கு?

ஒக்ரோபர் 8, 2007

நீங்க பாத்திங்கன்னா மாற்றம் ஒன்றே மாறாதது(நீங்க பாக்காட்டியும் அது தாங்க மாறாதது). எம்முட்டு நாள் தாள் பிளாக்கருக்குள்ளேயே இருக்குறது நமக்குள்ள ஒரு மாற்றம் வேண்டாமா? அதனால தான் வூட்டை மாத்திட்டேன், பிளாக்கருல இருந்து வேர்டுபிரஸ்ஸுக்கு மாறிட்டேன், மாற்றம் கீற்றமுன்னு சீனை போடுறானே புதுசா ஏதாவது எழுதிடப்போறன்னு நீங்க தப்பு கணக்கு போட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல ஆமாம் சொல்லிட்டேன். ஏரியா தான் மாறி இருக்கு ஆள் மாறலை அதனால சேம் மொக்கை, copy paste தான் இங்கேயும்.

எலேய் எவன்டா அது ஆபீசுல பிளக்கருக்கு ஆப்பு வெச்சிட்டாங்க அதனால இதுக்கு மாறிட்டு என்ன சீனை போடுறான் பாரு இவன்னு சொல்லுறது, பிச்சி புடுவேன் பிச்சி. இதனால நான் சொல்லிகிறது என்னானா மக்களே நம்ம புது ஏரியாவுக்கும் அடிக்கடி வாங்க (நீ முதல்ல ரெகுலரா எழுது அப்புறம் நாங்க வருவதை பத்தி முடிவு பண்ணிக்கிறோமுன்னு சொல்லுறீங்களா அதுவும் சரிதான்.) பழகிப்பாருங்க புடிச்சா திரும்ப திரும்ப வாங்க பழகலாம்.