Archive for the ‘சொந்த கதை’ Category

இதெல்லாம் நல்லதுக்கு தானா?

மார்ச் 28, 2012

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

எவன்டா இங்க சந்தோசு?

நவம்பர் 13, 2007

நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான்.  நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி  ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது பொதுவா எல்லாருக்கு சனி புடிக்கும் இவன் சனியை புடிச்சிகிட்டான்.

ஒரு நாள் இவன் தண்ணியடிச்சிட்டு இருக்கும் பொழுது என்ன பாத்து “உனக்கு டென்னிஸ் விளையாட தெரியுமான்னு கேட்டாங்க?”. அதுக்கு நான் “எது! அந்த வடை சுடுற கரண்டியை ஆளுக்கு ஒண்ணு எடுத்துகிட்டு ஒரு கிழிஞ்சிபோன மீன் வலைக்கு இந்த பக்கமும் அந்த பக்கமுமா நின்னுகிட்டு, பந்தை தட்டிகிட்டு இருப்பாங்களே அதுவா? சே சே அது எல்லாம் ஒரு விளையாட்டா” அப்படின்னு கேட்டேங்க. அதுக்கு அவன் டேய் என்னோட 25 வருச பொது வாழ்க்கையிலையும் சரி பத்து மாச தனிபட்ட வாழ்க்கையிலும்  டென்னீசுக்கு இந்த மாதிரி ஒரு விளக்கம் சொல்லி கேட்டது இல்ல அப்படின்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டான்.

இந்த விளக்கதை கேட்ட பிறகாவது அடங்குவான் அப்படின்னு பாத்தா அவன் விடவில்லை. மச்சி “அமெரிக்கா வந்து நயாக்ரா பாக்காம போனா எம்முட்டு அசிங்கமோ அதே மாதிரி டென்னீஸ் விளையாடம போனா அசிங்கம்” அப்படின்னு சொன்னதோட, நான் Atlantaவுல ஒரு seeded player உன்னை Roger federar (அய்யோ பாவம் இது யார் பெத்த புள்ளையோ, விஷயம் தெரிஞ்சா அவரோட பெயரை மாத்தி வெச்சிகுவார்) ஆக்கி காட்டிட்டு தான் மறுவேலை அப்படின்னு சொன்னான். சரி குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சி அப்படின்னு பாத்தா.

அடுத்த நாள், ரெண்டு வடை கரண்டியோட வந்து நிக்கிறான். நானும் என்னடா கரண்டியோட நிக்கிற, ஏதாவது கல்யாண வீட்ல வேலை பாக்க போறீயா?  அப்படின்னு கேட்டேன். அவன் டென்ஷனாகி டேய் இதுக்கு பெயர் “Racquet” அப்படின்னு ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிசம் மொக்கையை போட்டான். வழக்கம் போல நமக்கு ஒண்ணும் புரியலை ஆனாலும் அவன் மொக்கைக்கு பயந்து சரி சரின்னு புரிஞ்ச மாதிரி மண்டையை ஆட்டிடேன்.

சரி வா கோர்டுக்கு போகலாமுன்னு சொன்னான், டேய் இப்ப என்ன ஆகிப்போச்சின்னு கோர்டுக்கு கூப்புடுறே, எங்கப்பா நான் கோர்டுக்கு போனது தெரிஞ்சா அவ்வுளவு தான் கொன்னே போட்டுவாரு. எதுனாலும் பேசி தீத்துகலாம் கோர்டு எல்லாம் வேணாமுன்னு சொன்னேன். அடசே அறிவுகெட்ட முண்டம்(உனக்கும் அது தெரிஞ்சி போச்சா?) டென்னீஸ் கோர்டுக்கு போவலாம் வான்னு கூட்டிகிட்டு போனான்.

அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அவனுக்கு சனி, தனி ஆளாக 8 set ஆடுற ஆளு என் கூட ஒரு 30 நிமிசம் விளையாடினதுல களைச்சிப்போயிட்டான். அதுவும் அந்த 30 நிமிசத்துல நான் அடிச்ச ஒரு பந்தை கூட அவனால தொட முடியால, எப்படி நம்ம திறமை(ஹிஹி.. பந்து கோர்டுக்குள்ள இருந்தா தானே தொட முடியும்.). இப்படியே ரெண்டு நாள் போச்சி தாங்காதுடா சாமி அப்படின்னு மூணாவது நாளில் பந்து எடுத்து போட ஒருத்தனை கூட்டிகிட்டு வந்தான், அதுக்கு அடுத்த வாரத்துல பாத்தா இன்னும் ரெண்டு பேர் அடடா என்னை சமாளிக்க நாலு பேரா அப்படின்னு புல்லரிச்சி போயிட்டேனுங்க.அப்புறம் என்னோட திறமையான ஆட்டத்தை பார்த்து வழக்கம் போல என்னைய பந்து எடுத்து போடவும், கை தட்டவும் (கிரிக்கெட் நியாபகத்துல பந்து வெளியே போகும் போது விசில் அடிச்சி திட்டு வாங்குனது வேற விசயம்) யூஸ் பண்ணிகிட்டாங்க.

கொஞ்ச நாள் கழிச்சி ஒரு வெள்ளைக்காரன் கோர்டுக்கு வந்து “எவன்டா இங்க சந்தோசு” (டைட்டிலை சொல்றதுக்குள்ள ஸ்ப்ப்ப்ப்பாஆஆ முடியலை…) அப்படின்னு சவுண்டு விட்டான். சரி நம்ம திறமையை பாத்து நம்மளை அடுத்த U.S Open பைனலுக்கு டைரக்டா விளையாட கூப்புடறாங்களோன்னு நினைச்சி நான் தான்னு சொல்ல வாய் எடுத்தேன். அதுக்குள்ள பின்னாடி இருந்து ஒரு சவுண்டு “எவன் அடிச்சா பந்து நெட்டையும் தாண்டாம கோர்டுக்குள்ளாரையும் இல்லாம இருக்கோ அவன் தான் சந்தோசுன்னு” அப்படின்னு, யாருடா அது நம்ம திறமையை இப்படி வெட்ட வெளிச்சம் ஆக்குறதுன்னு பாத்தா நம்ம ராஜ்.

அப்புறம் தான் தெரிஞ்சது அட்லாண்டாவுல முதல் பத்து இடத்துல இருந்த அவன் எனக்கு சொல்லி தர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வேகமா வளர்ந்து 50வது இடத்துக்கு போயிட்டானாம். அந்த வெள்ளைக்காரன் வேற யாருமில்ல அவனோட கோச் தான், ஒரே மாசத்துல அவன் வாழ்க்கையில இம்முட்டு பெரிய மாற்றத்தை செய்ததை யாருன்னு தெரிஞ்சிக்க ஒரு கொலை வெறியோட வந்து இருக்காரு. நம்ம திறமைக்கு இதெல்லாம் சாதாரணமப்பா என்ன சொல்றீங்க?

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா சாமி தமிழ்மண தர்மகத்தாவே, நீங்க ஆள் தெரியாம எனக்கு அனுப்பி இருந்தாலும் பரவாயில்லை இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன், நான் தான் அந்த வாரத்துல நட்சத்திரமா இருப்பேன்னு அவங்க யோசிக்கிறதுக்கு கூட டைம் குடுக்காம கெட்டியா புடிச்சிகிட்டேன். 

அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து என்ன என்னத்தை எல்லாம் எழுதி பெருமை சேர்த்து இருக்காங்க. எனக்கு என்னத்தை தெரியும் சொல்லுங்க, நான் என்னாத்தனு எழுத முடியும்? இருந்தாலும் விடுவோமா?

அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது. பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ரைட்டு விடுங்க, இம்முட்டு சொல்லியும் என் பேச்சை கேக்காட்டி என்ன பண்றது, சோலிய முடிச்சிட வேண்டியது தான், இதுக்கு மேல உங்க தமிழுக்கு என்னால உத்திரவாதம் குடுக்க முடியாது, நம்மளோட அடுத்த மீட்டிங்கு டைரக்டா ரத்த பூமியில தான் வரட்டா.

ஆபீஸர் இந்த எட்டுக்கு லைசென்ஸ் குடுப்பிங்களா?

ஜூன் 25, 2007

நம்மளையும் எட்டு போட வெக்கணும் அப்படின்னு அன்பா நம்ம RTOங்க கப்பியரு, சர்வேசரு, குசும்பரு, குட்டிபிசாசரு (எல்லாரும் RTOவாச்சே வாங்க ஆபீஸர் போங்க ஆபீஸர் அப்படின்னு கூப்பிடாட்டி கோச்சிகிட்டு லைசன்ஸ் கொடுக்காம போயிட்டா என்ன பண்றது) எல்லாம் கூப்பிட்டு இருக்காக.

இந்த விளையாட்டுல நம்மளை பத்தி எட்டு தகவல் குடுக்கணுமாமே? நம்ம என்ன அப்துல்கலாமா? இல்ல அப்ரகாம் லிங்கனா? நம்மளை பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டு அதை பின்பற்றுவதற்கு. சரி நம்ம பதிவுலகுல இருக்கும் அண்ணன்களிடம்(பெண்களுக்கு இட ஒதுக்கீட தரலைன்னு யாரும் சண்டைக்கு வராதிங்க ஒரு ரைமிங்குக்காக இப்படி சொல்லி இருக்கேன்.) நமக்கு இருக்கும் எட்டு கேள்விகளை கேட்டு பதிலை தெரிஞ்சிகலாமுன்னு எட்டு கேள்விங்களை கேட்டு இருக்கேன் யாராவது பதிலை சொல்லுங்களேன்?

1. எல்லாரும் பெப்சிக்கு mixingகாக பிராந்தி, விஸ்கி, ரம்மு, ஜிம்முன்னு எதையோ ஊத்தி குடிக்கிறாங்க. நான் அவனுங்களுக்கு ஒரு படி மேல போயி பெப்சியை rawவாக குடிப்பேன். அப்படி இருந்தும் நான் குடிகாரன்னு என்னைய சொன்னா ஏண்ணே என்னைய கட்டி வெச்சி வெளுக்குறாங்க? mixing இல்லாம பெப்சிஜ rawவாக குடிக்கிறது தப்பாண்ணே?

2. இப்படித்தான் பாருங்க போன வாரம் நம்மாளு ஒருத்தன் “மச்சான் நம்ம ஊட்ல potlock(கூட்டாஞ்சோறு) இருக்கு உன்னால முடிஞ்சத எடுத்துட்டுவா” அப்படின்னு சொன்னான். நானும் அவங்க வீட்டுக்கு போனேன் ஒருத்தன் என்னடான்னா veg pulav அப்படிங்கிறான் இன்னொருத்தன் என்னடான்னா இட்லி சாம்பார் அப்படின்னான், நீ என்ன கொண்டு வந்தே அப்படின்னு கேட்டாங்க, அதுக்கு நான் “சாப்பிட வாயும் அதுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு கையையும் கொண்டு வந்தேன்” அப்படின்னு சொன்னதுக்கு அடுத்த வார கச்சேரியில வெளுத்துடாங்க? கூட்டாஞ்சோறுக்கு இதை எல்லாம் கொண்டு போக கூடாதாண்ணே?

3. டிவியில ஏதோ footballஆம், அதுல ஒரு பந்து பின்னாடி 20 பேர் முந்திஅடிச்சிகிட்டு ஓடிகிட்டு இருந்தாங்க, நான் கூட ஏண்டா கோடி கோடியா சம்பாதிக்கறீங்க சொந்தமா ஆளுக்கு ஒரு பந்து வாங்கி வெச்சி வெளையாட கூடாதான்னு சொன்னேன், அதுக்கு ஏண்ணே எல்லாரும் என்னைய ஒரு மாதிரி பாக்குறாங்க? உருப்படியான யோசனை சொல்றது தப்பாண்ணே?

4. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க NASAவுக்கு போயி இருந்தேன், அங்கன ஒரு ஆளு ராக்கெட்டை காட்டி எல்லாத்தையும் விளக்கிட்டு “any questions” அப்படின்னு கேட்டாங்க. நான் சாமி சாமி இம்முட்டு செலவு செஞ்சி ராக்கெட் எல்லாம் செஞ்சி இருக்கீங்க, ஏன் சாமி காத்தாட ஒக்காரலாமுன்னு பாத்தா ஒரு சன்னல் கூட இல்லை ஏன் ஒரு சன்னல் வெக்க கூடாதா சாமி? அப்படின்னு கேட்டதுக்கு கழுத்தை புடிச்சி வெளியே தூக்கி கொண்டுவந்து போட்டுட்டாங்க. ஏண்ணே அறிவாளியா இருக்குறது தப்பாண்ணே?

5. இப்படித்தான் பாருங்க நான் நாலாவது படிக்கும் பொழுது ஏப்ரல் ஒண்ணாம் தேதி வந்தது எல்லாரும் மத்தவங்க சட்டையில ink penஜ உபயோகித்து ink தெளிச்சிகிட்டு இருந்தாங்க, நானும் இன்னொருவனும் மட்டும் கொஞ்சம் innovativeவாக யோசிச்சி ball point penனின் refillயின் முனையை எடுத்து பின்னாடி வழியா வாய் வெச்சி ஊதி அதை எடுத்து அடுத்தவன் சட்டையில தடவினோம்(சட்டை அத்தோட சரி தூக்கி போட வேண்டியது தான்). இதுக்கு போயி யாராவது நிக்க வெச்சி முதுகு தோலை உரிப்பாங்களா? ஏண்ணே Innovativeவாக இருப்பது தப்பாண்ணே?

6. காலேஜ் படிக்கும் பொழுது attendance sheetல வராதவங்க roll numberஜ எழுதுவாங்க. வாத்தியார் போயிட்ட பின்னாடி நாங்க அதுல நமக்கு கமிஷன் வெட்டுனவங்க நம்பரை எல்லாம் அடிச்சிட்டு வாத்தியார் மாதிரியே கையெழுத்து போடுவேன், அதுக்கு போயி இந்த சின்ன புள்ளை மேல விசாரணை கமிஷன் வெச்சிடாங்க. படிக்கு பொழுது மட்டும் வாத்தியார் மாதிரியே பெரிய ஆளா வரணும் அப்படின்னு சொல்றாங்க, அதுக்கு முதல் படியா அவரை மாதிரி (சமயத்துல அவரை விட கொஞ்ச நல்லாவே) கையெழுத்துப்போட்டா தப்பாண்ணே? வாத்தியார் மாதிரி பெரிய ஆளா வருவது தப்பாண்ணே?

7. ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி 60 மைல் speed limit உள்ள ரோட்டில் 90 மைல் வேகத்துல போயிட்டு இருந்தேன் இது தப்பு அப்படின்னு போலீஸ் புடிச்சி fine போட்டுடாங்க. வாழ்கையில வேகமா முன்னேறுவது தப்பாண்ணே?

8. படத்தை ஓடவிட்டு அதுக்கு முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காந்துகிட்டு இது சரியில்லை அது சரியில்லை அப்படின்னு டிவி பொட்டில சொல்லும் பொழுது என்னமா பிரிச்சி மேயிறாங்க அப்படின்னு பாராட்டுறவங்க, நான் அதையே தியேட்டருல செய்யும் பொழுது ஏண்ணே என்னைய போட்டு அடிக்கிறாங்க? தியேட்டருக்குள்ள படம் ஓடும் போது அதை விமர்சனம் செய்றது தப்பாண்ணே?

எட்டு பேரை கூப்பிடவேண்டும் என்று சொல்லி இருக்காங்க. ஏதோ நம்ம புண்ணியத்துல இந்த 8 பேரும் எந்த சோதனையும் இல்லாம லைசென்ஸ் வாங்கட்டும்.

1. நம்ம சாத்தான்குளத்து அண்ணாச்சி ஆசிப்

2. இந்த வார நட்சத்திர மங்கை நந்தினி

3. பூனையாக இல்லாமல் போனதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கும் மோகன் தாஸ்

4. பக்தி மார்கத்துல முக்திக்கி வழி சொல்லிட்டு இருக்கும் KRS

5. நம்ம மருதநாயகம் அண்ணாச்சி

6. ஈழத்து இளம் புயல் கானா பிரபா

7. முன்னாடி பக்கத்தை காட்டாம மறுபக்கத்தை மட்டும் காட்டிகிட்டு இருக்கும் நம்ம மணியண்ணன்

8. நம்ம தாசண்ணே

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

173. வித்தியாசமான நான்

மார்ச் 25, 2007

எனக்குள் இருக்கும் வித்தியாசமானவை(weird) அல்லது நான் செய்யும் வித்தியாசமானவற்றை சொல்லுமாறு நம்ம மணி,புலி, சர்வேசரும் கேட்டுகிட்டாங்க. என்னங்க பண்றது தமிழுக்கு வந்த கொடுமை தான் கொஞ்சம் சகிச்சிகோங்க.

வேகம் பைக்கில் தனியா போகும் பொழுது அம்முட்டு வேகம். போன முறை இந்தியா போகும் பொழுது இரவு ஆபீசுக்கு போக வேண்டியாதப்போச்சி, யாருமே இருக்க மாட்டாங்க ரோட்டில் ஒரே அழுத்து தான் பாக்குறேன் 90 கிமில (அதுவும் என்னோட ரூம் மேட் புது பைக். பைக்கை பூ போல வச்சிகிட்டு இருந்தான் மாப்பி 40க்கு மேல போகக்கூடாதுன்னு சத்தியம் எல்லாம் வாங்கிட்டு தான் வண்டியை குடுத்தான்.) போயிட்டு இருக்கேன். வேகமா யாருமே இல்லாத ரோட்டில் போவது ஒரே ஜாலி தான் போங்க. அதுவும் எவனாவது பைக்கில் challenge செஞ்சிட்டாப்போதும் அம்முட்டு தான் அதுல வெற்றி பெற எவ்வுளவு வேகம் வேணாலும் போவேன் ஒரு சில சமயங்களில் 2 அல்லது 3 கிலோ மீட்டர் துரத்திக்கொண்டு போயி ஜெயிச்சிட்டு வண்டியை ஜபர்தஸ்தா திருப்பிக்கிட்டு வருவேன். ஒரு முறை நைட்டு ஒரு 2 மணி இருக்கு லோக்கல் ரோட்டில் காரை ஓட்டிகிட்டு இருந்தேன் தீடீரென என்னடா வாழ்க்கை இது ஒரே laneல போவதுஅப்படின்னு தோன்றியது உடனே ரெண்டு laneனுக்கு நடுவுல வண்டிய கொஞ்ச நேரம் ஓட்டினேன், அப்புறம் கொஞ்ச நேரம் opposite sideல ஓட்டினே, அப்புறம் photo enforcedஆ இல்லாத ரெண்டு traffic lightஜ redஇல் கடந்தேன். அப்புறம் orange lightஜ பார்த்தால் எப்படியாவது கடக்க முயற்சி செய்வேன், இப்படி எல்லாம் செய்து வாங்குற ஜந்து பத்தும் பைனாவே போயிட்டதனால் கொஞ்சம் அடங்க வேண்டியதாப்போச்சி.

நக்கல் இதை பத்தி சொல்லவே வேணாம், அதுவும் தியேட்டருக்கு போயி படம் பார்க்கும் பொழுது எனக்குள்ள தூங்கிட்டு இருக்குற நக்கல் நாரயணசாமி பொங்கி எழுந்துடுவாரு, அதுவும் நம்ம கேப்டன் படம், ஏதாவது மொக்கை படம் அப்படின்னா கேக்கவே வேணாம், அவரு ஒரு ஆட்டத்தை போட்டுட்டு தான் அடங்குவாரு. இவரால ஏகப்பட்ட இடத்துல அடுத்தவங்க அடிவாங்க வேண்டியது இது வரைக்கும் பொழச்சிகிட்டு இருக்கோம். இங்க அமெரிக்கா வந்த பொழுது “War of the World” அப்படின்னு ஒரு செம குப்பை படம் அதுக்கு முதல் நாளில் பார்க்க போயி ஏக டென்ஷன் ஆகிவிட்டது அப்புறம் கொஞ்சம் நக்கல் அடிக்க ஆரம்பிச்சி நம்ம பசங்க கெக்க பிக்க அப்படின்னு சிரிக்க பின்னாடி இதை ஒரு reserch படம் ரேஞ்சுக்கு வாயில ஈ போவது கூட தெரியாம பார்த்துகிட்டு இருந்த வெள்ளைக்காரங்க கடுப்பாயி என்னை தவிர மத்தவங்களை கூப்பிட்டு சும்மா இருக்கிங்களா இல்ல வெளியே இருக்கிங்களான்னு கேட்டு மிரட்ட ஒரே தமாசு தான்.

இந்த கிரிக்கெட் மேட்ச் நடக்கும் பொழுது எல்லாரும் கூடி நின்னு ஒரு அணிக்கு ஆதரவா பேசிகிட்டு இருப்பாங்க ஒரு விறுவிறுப்புக்காக எப்பவுமே எதிர்நாட்டுக்கு ஆதரவா பேசுவோம், பெரும்பாலும் நாங்க எதிர்க்கும் அணி இந்தியாவாப்போயிடும் ஒரு பெரிய கும்பலே கொலை வெறியோட எப்பவுமே எங்களை துரத்துவாங்க. இதை நான், சிறில், பாபா இந்தியா இலங்கை மேட்சில செய்யப்போயி நம்ம மணிகண்டனுக்கு BP ஏறி ஒரே காமெடி தான் போங்க. இதை போசும் பொழுது சில சமயம் ரொம்ப செண்டிமென்டா தேசப்பற்றை எல்லாம் வம்புக்கு இழுப்பாங்க, ஆனால் இதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம்டி. ஆனா நாடு அப்படின்னு வரும் பொழுது இந்தியாவை யாராவது எதிர்த்தா பின்னி பெடல் எடுத்துடுவோம்.

சாப்பாடு அதுவும் அமெரிக்கா வந்த பின்னாடி ரொம்ப weired ஆயிட்டேன். எந்த கடைக்கு போனாலும் அங்க மெனுவில் இருக்குற வித்தியாசமான பெயருல்ல ஒரு டிஷ்ஷை எப்ப பார்த்தாலும் ஆர்டர் செய்வேன். பெரும்பாலும் அது பெரிய flopஆயிடும். வீரனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் அப்படின்னு நினைச்சிகிட்டு அடுத்த முறையும் அதை continue செய்வேன். ஒரு முறை star bucksஇல் போயி பெயர் புதுசா இருக்கேன்னு ஒரு காபி வாங்கினேன் பாருங்க, அதுல மாதுளம் பழத்தையும், strawberryஜ போட்டு நினைச்சி பாக்கவே முடியாத ஒரு combination. அப்புறம் என்ன வழக்கம் போல குப்பை தொட்டி தான். பெரும்பாலும் நான் வாங்கும் ஜுஸ் மற்றும் உணவு ஜட்டம் என்னால் அடுத்த முறை வாங்க முடியாது ஏன்னா அதை அப்படியே discontinue செய்து இருப்பாங்க. பசங்க எப்ப கடைக்கு போனாலும் என்னைய முதலில் order செய்ய சொல்லுவாங்க ஏன்னா அதை தவிர மத்ததை அவங்க ஆர்டர் செய்யலாம் இல்லையா? அப்புறம் சாப்பாடு விஷயத்துல இன்னொரு weired மேட்டர் என்னானா கொலை பசி யோட இருப்பேன் ஆனா ஒரு 20வது தோசை சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் பொழுது திடீரென்று வயறு நிரைந்த feeling வரும் அதுக்கு அப்புறம் ஒரு சின்ன பீஸ் தோசை உள்ள போனாலும் வாந்தியா வெளியே வந்துடும். இது 20வது தோசையில் மட்டும் சொல்ல முடியாது 2வது தோசையிலும் சில சமயம் வரும். எல்லாரும் அடுத்த தோசை எப்ப வரும் அப்படின்னு தட்டை பாத்து ஒக்காந்துகிட்டு இருப்பாங்க, நான் இந்த feeling எப்படா வரும் அப்படின்னு ஒரு பயத்தோட ஒக்காந்துகிட்டு இருப்பேன்.

அப்புறம் தெரிஞ்சவங்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு போயி உதவுவது. நிறைய சமயம் பல்பு மற்றும் இன்ன பிற வாங்கினாலும், வாங்கிக்கொண்டே இருந்தாலும் இதை மட்டும் விட முடியலை.

அதுக்கு அப்புறம் நம்மளை யாராவது ஏதாவது தெரியாதுன்னு நக்கல் அடிச்சிட்டா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு அவங்க செய்ய முடியாதுன்னு சொன்னதை எப்படியாவது செய்து காட்ட முயற்சி செய்வேன்(பல நேரம் பல்பு வாங்கி இருக்கேன் அது வேற மேட்டர்). அப்படி செய்தாலும் அவங்க கிட்ட போயி நான் ஜெயிச்சதா காட்டிக்க மாடேன், என்னோட மன திருப்திக்காக செய்து முடிப்பேன். இப்படித்தான் கல்லூரியில் ஒரு நண்பன் ஒரு முறை கவிதை புத்தகத்தை வெளியிட்டான், அவன்கிட்ட கவிதை எப்படி எழுதுவதூன்னு கேட்டேன் அதுக்கு நக்கலா உனக்கா கவிதையா டேய் எலி ஏரோப்ளேன் ஓட்ட ஆசை படலாமான்னு கேட்டான் அப்படி ஒரு கோவம் ஆனாலும் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு அடுத்த ஒரு வாரம் நூலகத்தில் முதல் கொண்டு டீக்கடை வரை கவுஜ மாதிரி எங்க தமிழை ஜாங்கரி சுட்டு போட்டு இருந்தாலும் படிச்சி கொஞ்ச நாளில் ஏதோ கிறுக்கி அதை கவிதைன்னு ஒத்துக்க வெச்சேன் அப்புறம் வைரமுத்து முதல் கொண்டு தமிழ் தாய் வரை கண்ணீர் விட்டு கதறியதால் அத்தோட நிப்பாட்டிகிட்டேன். இதே வெறி தான் ஜாவாவில் புரோக்கிராம் செய்ய முடியாதுன்னு நக்கல் வந்த பொழுதும், Quake மற்றும் DxBall கேம் வரை (இந்த கேமை நைட்டு ஒரு 12 மணிக்கு விளையாட ஆரம்பிப்பேன் விடியல் காலை வரை விளையாடி High scoreஇல் என்னோட பெயரை ஏத்திட்டு தான் தூங்க ஆரம்பிப்பேன்.). இது ஏன்னா எனக்கு ரொம்ப புடிச்ச quote “If you say I can’t. It means two things one you dont want to or you dont know how to” அப்படின்னு Antony Robbins சொன்ன வரிகள் தான்.

அப்படியே ஒரு ஜந்து பேரை கூப்பிடனுமாமே இதோ கூப்பிட்டாப்போச்சி.

1. செல்வன்
2. பாபா
3. குமரன்
4. குழலி
5. சிவபாலன்

158. கஞ்சி ஊத்தி இருக்காங்க

பிப்ரவரி 9, 2007

பர்கரும் பீஸாவுமாவே சாப்பிட்டு வளர்ந்த எனக்கு(சரி அடங்கு.. அரசியல் வாழ்க்கையில இது எல்லாம் சகஜமப்பா.. அய்யோ இது அந்த அரசியல் வாழ்க்கை இல்லிங்கோ) நம்ம கவிதா மேடமும் நண்பர்களும் நம்மளையும் ஒரு ஆளுன்னு மதிச்சி இங்கன கஞ்சி ஊத்தி இருக்காங்க. சிந்தாம சிதராம குடிச்சி இருக்கேனானு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்களேன்?