Archive for the ‘நகைச்சுவை’ Category

193. Ocean 13 – படத்துக்கு போன கதை

ஜூன் 11, 2007

இந்திய விடுதிகளில் வயிறு முட்ட Buffet சாப்பிட்டுவிட்டு Highwayயில் கார் ஓட்டினால் தூக்கம் வரும், அப்புறம் பொதுமக்களுக்கு சேதம் வரும் அதை தவிர்க்கலாம் அப்படிங்கிற நல்லெண்ணத்துல அக்கம் பக்கத்துல இருக்குற தியேட்டருக்கு போயி ஏதாவது ஒரு படம் பார்ப்பது வழக்கம். அது மாதிரி இந்த வாரம் போன படம் தான் Ocean 13. 4:30 மணி படத்துக்கு 3 மணிக்கே தியேட்டருக்கு போயாச்சிங்க, சரி அது தான் இன்னும் நேரம் இருக்கே உருப்படியா ஏதாவது செய்யலாம் அப்படின்னு நினைச்ச பொழுது. கூட இருந்தவன் மச்சி Pirates of Carribian போலாம் படம் ரொம்ப அருமையா இருக்குதாம் அப்படி இப்படின்னு பில்டப்பு குடுத்தான், சரி காசா பணமா ஒரு மணி நேரம் தானே அப்படின்னு கிளம்பினோம். சனி Pirates உருவுல எங்களை அடுத்த ஒரு மணி நேரம் ஆட்டுவிக்க போறான் அப்படின்னு தெரியாம.

நான் போன நேரம் கப்பலில் போயிட்டு இருக்குறவங்க அப்படியே ஒரு அருவியில் விழுந்து வழி மாறி, அடுத்த உலகம் அப்படின்னா கடலில் செத்தவங்க எல்லாம் இறந்த பிறகு போகும் உலகமாம் அது. அவன் அவன் வழிமாறி அடுத்து தெரு, அடுத்த ஊரு, அடுத்த நாடு மிஞ்சி போனா அடுத்த கண்டத்துக்கு தான் போயி இருக்காங்க எப்படி இவங்களால் மட்டும் அடுத்த உலகத்துக்கு போக முடியுமோ? எந்த ஊருலடா இப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிக்கறீங்க.

தொலைந்து போயி ஆள் ஆளுக்கு ஒரு இடத்துக்கு போயிடறாங்க, நம்ம Jack Sparrow (Johnny Depp) மட்டும் தனியா ஒரு இடத்துல இருக்கிறாரு. அந்த ஆளு நல்லா இருக்காரா இல்ல லூசான்னு ஒண்ணுமே புரியலைங்க. இந்த லட்சணத்துல புரியாத மாதிரியே அவரு பேசுறாரு. அப்படி தொலைந்து போன இடத்துல எங்க பாத்தாலும் பனி ஆனா பாருங்க இவரு வருவாருன்னே அங்க ஒரு பெரிய கப்பல் காத்துகிட்டு இருக்குங்க. இவரு தனி ஆளாக இழுத்து பாக்குறாரு ஒண்ணும் முடியலை. இவரோட கஷ்டத்தை பாத்து அங்க இருக்குற நண்டுங்க எல்லாம் ரொம்ப பீலிங்க்ஸ் ஆப் Next World ஆகி அந்த கப்பலில் இவரை ஏத்தி கப்பலை தள்ளி கொண்டுவந்து கடலில் சேத்துடுங்க. டேய் டேய் ஏண்டா இப்படி logicல லாரியை கொண்டு ஏத்துறீங்க அப்படின்னு வாய் விட்டு கத்தலாம் போல இருந்திச்சிங்க.

இதுக்கு போகலாம் அப்படின்னு அடம்புடிச்சி கூட்டிட்டு வந்த நண்பனை பாத்தா இங்க நடப்பதற்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி. அவன் ஆளு கூட SMSல Chat பண்ணிட்டு இருந்தான். என்ன பாத்த உடனே மச்சி சூப்பர் இல்ல Chance illa அந்த settingஜ அவன் Costumesஜ பாரு அப்படி இப்படின்னு பில்டப்பு குடுத்தான். எனக்கு வந்துச்சி பாருங்க கோவம் டேய் என்னை கொலைகாரன் ஆக்கணும் அப்படின்னே அலையுறீங்களாடா, ஒரு மொக்கை படத்துக்கு கூட்டிட்டு வந்துட்டே இல்ல இன்னிக்கு ராத்திரி நான் சமைச்சி போட்டா தான் நீ அடங்குவடா அப்படின்னு சொன்னேன். ஹி ஹி மச்சி இன்னும் 15 நிமிசத்துல போன் பண்ணுவா போனை எடுக்காட்டி பிரச்சனை ஆயிடும், விடாம போன் பண்ணிட்டே இருப்பா படம் பாக்கவே விட மாட்டா, அவகிட்ட permission கேட்டுகிட்டு இருக்கேன், Negiotation முடியுற மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லுறான் (சரி பையன் காலில் விழுந்துட்டான் போல அப்படின்னு நினைச்சிகிட்டேன்.). ஹும் உங்க போதைக்கு நாங்க ஊருகாய் நல்லா இருங்கடான்னு அப்படின்னு சொல்லிட்டு. சுத்தி முத்தி பாத்தா கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கு யாரையும் காணோம் அட படத்துல இல்லிங்க தியேட்டரில் சொல்லுறேன். வேற வழியே இல்லாம படத்தை தொடர்ந்து பாத்தேன்.

தொலைந்த எல்லாரும் எங்க இருந்தோ வந்து கூடிடறாங்க. சிறு சிறு பிரச்சனைங்களுக்கு அப்புறமா ஒரு வழியா எல்லாரும் கிளம்புறாங்க. வழியில செத்த பிணம் எல்லாம் மிதக்குது. அப்ப தான் அவங்களுக்கு புரியுது அடடா அடுத்த உலகத்துக்கு வந்துட்டோம் அப்படிங்கிறதே. அதை பாத்து ஒருத்தரு, கடலில் செத்தவங்க எல்லாம் இப்படி மிதப்பாங்க யாரோ ஒருத்தர் வந்து அவங்களுக்கு மோட்சம் மாதிரி குடுக்குற வரைக்கும் அங்கன இருப்பாங்கலாம் அப்படின்னு விளக்கம் எல்லாம் குடுக்குறாங்க. அதுல கூட சில பேர் சின்ன சின்ன படகில் விளக்கோட இருப்பாங்க சில பேர் தண்ணிக்குள்ள மிதந்துகிட்டு இருப்பாங்க. அதுக்கும் ஒரு விளக்கம் குடுத்தாங்க.

அந்த பொண்ணு Elizabethதோட(Keira Knightley) அப்பா செத்து ஒரு சின்ன படகுல போயிட்டு இருக்காரு, அவரை பாத்த உடனே இந்த புள்ளைக்கு இம்முட்டு நாளும் உள்ளுக்குளேயே பொங்கிட்டு இருந்த பாசம் பொங்கி வழிந்து ஓடுதுங்க. எப்படியாவது அவரையும் கூட்டிகிட்டு வருவேன் அப்படின்னு அந்த புள்ள ஓடுது குதிக்குது ஆடுது. அந்த புள்ளையை அடக்குறதுக்குள்ள உஸ்யப்பா முடியலைங்க.

அது முடிஞ்சிச்சா நம்மாளு Sparrow ஆரம்பிக்கிறாரு. அம்முட்டு நேரமும் சும்மா இருந்த ஆளு ஏதோ ஒரு துண்டு காகிதத்தை எடுத்து என்னத்தையோ சுத்த, அதுவும் எதையோ காட்ட. அவரும் ஏதோ பைத்தியம் புடிச்ச மாதிரி கப்பலின் இந்த பக்கத்துல இருந்து அடுத்த பக்கத்துக்கு ஓடுறாரு. அதை பாத்த மத்த லூசுங்களும் கூட ஓடுதுங்க. அப்புறம் தான் தெரியுது அவங்க போயிட்டு இருக்குற கப்பலுக்கு கீழே தான் நம்ம உலகம் இருக்கு, அதனால கப்பலை கவுத்து போட்டா அது மூழ்கி போயி நம்ம உலகத்தோட மேல் பகுதியை அடையும் அப்படிங்கிற பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நம்ம பெருந்தகை Sparrow, கப்பலை கவுக்க கப்பலோட இந்த கடைசிக்கும் அந்த கடைசிக்கு ஓடுறாருங்க. இப்படியே ஒரு வழியா எல்லாரும் ஓடி ஓடி கப்பலை கவுத்து போடுறாங்கங்க. டேய் இப்படி ஓடி ஓடி கவுத்த ஒரு சின்ன படகே கவுறாதேடா இம்மாம் பெரிய கப்பல் எப்படிடா கவுறும்? அப்படியே அவங்க கப்பலை கவுத்து நம்ம உலகத்துக்கும் வந்து சேந்துடுறாங்கங்க. இதை ஓசியல பாத்துக்கே நான் கொதிச்சி போயி,இதுக்கு புரட்சிக்கலைஞர் படமே எவ்வுளவோ பரவாயில்லையே அப்படின்னு பக்கத்துல இருக்குறவனை பாத்தா.

இம்முட்டு பிரச்சனனக்கு நடுவுல நம்மாளு மும்முரமா கடலை சாகுபடியில இருக்கான்(இவனுங்க எல்லாம் விவசாயிங்களா போயி இருந்தா உலகம் முழுசும் கடலை பயிரை கொண்டு நிரப்பி இருப்பாங்க.). அவன்கிட்ட “டேய்! இன்னும் பத்து நிமிசம் இந்த படத்தை பாத்தேன் அப்புறம் உன் ஆளு உன் bodyஜ நாளைக்கு “An alien killed another alien” அப்படிங்கிற தலைப்பில் CNNல பாக்குற மாதிரி இருக்கும் பரவாயிலையான்னு கேட்டேன்”. அதை கேட்ட அவன் “நைட்டு இவன் சமையல் வேற, இவன் சாதாரணமா சமைச்சாலே பொழைப்போமான்னு இல்லையான்னு தெரியாது இதுல இவன் கொலைவெறியோட வேற இருக்கான் சாகுபடியை கொஞ்சம் நிப்பாட்டிட்டு கிளம்புவது தான் நல்லது” அப்படின்னு முடிவு செய்து சரி கிளம்பலாம் மச்சி அப்படின்னு கிளம்பி Oceans13 படம் போடுகிற தியேட்டருக்கு வந்தோமுங்க.

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்துச்சாம் அது மாதிரி. இந்த படத்துக்கு வந்தா LifeFree or Die Hard அப்படிங்கிற படத்தோட trailerல நம்ம Bruce Wills பறந்துகிட்டு இருக்குற ஒரு Helicopterஜ கார் கொண்டு மோதி கிழேவிழ வெக்கிறாரு, அடங்கப்பா ஆண்டவா ஏன் ஏன் எங்க மேல இந்த கொலைவெறி ரெண்டுவாரத்துக்கு முன்னாடி Spiderman 3ஜ பாக்க வெச்ச, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி Pirates படம், இப்ப இந்த படத்தோட trailerஆ, இன்னும் கொஞ்ச நேரத்துல Ocean’s 13 இதுக்கு மேல உடம்பும் மனசும் தாங்காது, எங்க மேல கொஞ்ச கருணைவை அப்படின்னு வேண்டிகிட்டே வந்தோமுங்க. ஆண்டவன் எங்க மேல கருணை காட்டினாரா இல்லையாங்கிறத? கூடியவிரைவில் Ocean13 படத்தோட விமர்சனத்தை பாத்து தெரிஞ்சிகோங்களேன்…

189. கவுஜ கவுஜ

மே 30, 2007

நமக்கும் ரொம்ப நாளா கவுஜ எழுதணும் அப்படின்னு ரொம்ப நாள் ஆசைங்க. ஆனா ஆசை இருக்கு ஆபீஸர் ஆக ஆனா அறிவு இருக்கு ஆணி புடுங்க அப்படிங்கிற மாதிரி, எந்த angleல ஒக்காந்து யோசிச்சாலும் நமக்கு கவுஜ வரலைங்க. இந்த சோகத்தை மறக்க போன வாரம் பீச்சுக்கு போனேனுங்க, மதுரைக்கு வந்த சோதனையை பாருங்க அங்கன இருந்த பிகரை பாத்த உடனே நமக்கு கவுஜ மழையா கொட்டுதுங்க.

பாருங்க நான் கொண்டு போனதோ ஒரு சின்ன பாத்திரம் அதுல இரண்டே இரண்டு தான் புடிக்க முடிஞ்சது, அப்படி புடிச்ச கவுஜங்களை உங்களுக்காக சிந்தாம சிதராம புடிச்சி கொண்டு வந்து இங்க போட்டு இருக்கேன், எப்படி இருக்குன்னு படிச்சி பாத்துட்டு சொல்லுங்க.

ஒரு பிகர் tubeல மிதந்துகிட்டு இருந்தாங்கங்க அதை பாத்து வந்த கவுஜ இது.

ஒரு
டயர்கடை

டுயூப்புல(tubeல)
மிதக்குது !!!

அடுத்த நாள் காலங்காத்தால எழுந்தேங்க மணியை பாத்தா 7 1/2 அப்படியே பக்கத்துல படுத்துகிட்டு இருந்த 71/2ஜ எழுப்பினேன் அது எழுந்து எனக்கு “Good Morning” சொல்லிச்சு, உடனே எனக்கு என்னவோ வருகிற மாதிரி இருந்திச்சிங்க அட என்னான்னு பாத்தா கவுஜ!!! அதையும் உங்களுக்காக புடிச்சி போட்டு இருக்கேன் பாருங்க.

ஒரு 71/2
7 1/2 மணிக்கு எழுந்து
இன்னொரு 71/2ஜ எழுப்பிச்சி !!!

யாருங்க அது, இதுக்கு எல்லாம் கலைமாமணி விருது குடுக்க மாட்டாங்க நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. யப்பா ஒரு வழியா ஒரு மொக்கை பதிவு போட்டாச்சுப்பா.

180. இந்திய அணியின் தோல்வி குறித்து நடிகர்களின் கருத்து

ஏப்ரல் 8, 2007

சொந்த சரக்கு இல்லிங்கண்ணா மெயிலில் வந்தது தான்.

சூப்பர் ஸ்டார்

அதிகமா தோத்தவனும்.. விளையாடவே தெரியாதவனும்
கப் வாங்கினதா சரித்திரமே இல்ல

கமல்

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித கிரிக்கெட் அல்ல…
அதையும் தாண்டி கேவலமானது .. கேவலமானது

கேப்டன்

இந்தியாவுக்கு ஒரு கிரிக்கெட் டீம்
ஒரு டீமுக்கு 11 பேர்
அந்த 11 பேருக்கும் சரியா விளையாட தெரியலை
அதனால கப் வாங்க முடியலை…
இந்தியாவுல எனக்கு பிடிக்காதது இந்த 11 பேர் தான்.

சூர்யா

எல்லாரும் நல்லா விளையாடி ஜெயிச்சி கப் வாங்க
நினைப்பது தன்னம்பிக்கை

ஒருத்தனுக்குமே விளையாட தெரியாம கப் வாங்க
நினைப்பது கூமுட்டை தனம்

விஜய்

ஒரு ஒரு மேட்சுல தோத்தாலே நான் முடிவு பண்ணிடுவேன்
வாழ்க்கையில இனி கிரிக்கெட் பாக்க கூடாதூன்னு.

விஜய டி.ராஜேந்தர்

இந்தியா சரியா விளையாடல கிரிகெட்டு
அதனால போச்சு அவங்களுக்கு மார்கெட்டு
இனிமே வரமாட்டாங்க சரிபட்டு
அவனுங்களை பொழந்துகட்டு
ஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா.

178. சபரி – உனக்கு ஏன் இந்த கொலைவெறி

ஏப்ரல் 6, 2007

உங்களுக்கு ஒரு முளு நீள காமெடி படம் பார்க்க வேண்டுமா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெஞ்சை ஈரமாக்கும் (படத்துல அந்த நக்கு நக்கறாங்கப்பா ஆளுக்கு ஒரு டஜன் துண்டு வாங்கிவெச்சோம் முதல் பகுதி முடியும் பொழுதே வாங்குன எல்லா துண்டும் ஈரமாயிடிச்சி) படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆச்சா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெட்டுல பாடாவதி printடோட படம் பார்த்து வெறுத்து போயி எப்படா இதுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் வந்து நல்ல ப்ரிண்டோட ஒரு படம் பார்க்க வேணுமா(பங்காளிங்க எல்லாம் நம்ம கேப்டனே உலகம் முழுவதும் வாழும் டமில் மக்களின் நலனுக்காக upload செய்து இருப்பாருங்ன்னு பேசிக்கிறாங்க) அப்ப நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் சபரி. சரி படத்துக்கு ஏகப்பட்ட ஹைலைட்டு, படத்தோட பேரு சபரின்னு வெச்சதுக்கு ஹைலைட்டுன்னு வெச்சி இருக்கலாம் அந்தளவுக்கு பட்த்துல ஹைலைட்டு பதிவின் நீளம் கருதி கொஞ்சமா இங்க தரேன்.

முதலாவது ஹைலைட்டும் படத்தோட Heavy weightடும் நம்ம கேப்பு கேப்டன் தான். நல்லவருன்ன நல்லவரு நல்லதே இப்படி ஒரு நல்லவரான்னு யோசிக்கிற அளவுக்கு அப்படி ஒரு நல்லவரு. அவரு ஒரு டாக்டரு, உலகத்துலேயே பெரிய இருதய அறுவை சிகிச்சை நிபுணரு (body sizeலயான்னு தெரியலை). 3 வருசத்துல 1000 heart operation செஞ்சி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் அப்படின்னு உலகம் முழுவதும் இருக்குற நோயாளிகளை குணப்படுத்துற டாக்டர் cum தெய்வம் இவரு. இம்முட்டு பெரிய டாக்டரு அரசாங்க ஆஸ்பத்திரியில தான் வேலை செய்றாரு. தனியா கிளினிக் வெச்சி நடத்துனாலும் அதுல வருகிற காசை அப்படியே ஏழைங்களுக்கு குடுத்துடுவாரு. இவருக்கு காபி குடுக்க ஆஸ்பத்திரிக்கு வருகிற அவரது அப்பாவே டோக்கன் போட்டு லைன்ல நின்னு தான் குடுக்குறாருன்னா பாத்துகோங்க எம்முட்டு நல்லவருன்னு.

அடுத்த ஹைலைட்டு படத்தோட வில்லன். கேப்டனுக்கு ஈடு இணையா இவரும் நல்லவரு, பக்திமான் எப்படின்னு கேக்கறீங்களா? கொலை செஞ்சிட்டு வந்த கையோட அதுக்கு பரிகாரமும் செஞ்சிடுவாராம் இவரு. அப்புறம் வழக்கம் போல நீதிபதி, மந்திரி, கலெக்டர், அப்படின்னு கேப்டனை தவிர மத்த அரசாங்க ஊழியர்கள் எல்லாம் இவரோட கையாள்.

சென்னை என்னங்க நான் இங்க வந்த ரெண்டு வருசத்துல இம்முட்டு மோசமாயிடிச்சி. அரசு மருத்துவமனையில் special wardல நம்ம டாக்டர் சபரி வந்து அடிச்சி கேக்குற வரைக்கும் விபச்சாரம் நடக்குது, தண்ணி அடிக்கிறாங்க, ரெஸ்டு எடுக்க பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வராங்க என்னவோ போங்க. அடுத்து என்னங்க இப்படி நடுரோட்டுல ஒரு 5000 பேர் சுத்தி நின்னுட்டு இருக்கும் பொழுது ஒரு அரசாங்க அதிகாரியை வில்லனோட அடியாளுங்க நிக்க வெச்சி வசனம் பேசி வெட்டிட்டு போறாங்க. சென்னையில் அரசாங்க அதிகாரிங்களுக்கு எல்லாம் பாதுகாப்பே இல்லையா?

அடுத்து ஒரு இன்ஸ்பெக்டர் என்னடான்னா lockupல வெச்சி கைதியை விசாரணை செய்யாம கொலை நடந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து எப்படிடா வெட்டுன அப்படின்னு கேக்குறாரு, நம்ம வில்லன் வந்து அவரை வெட்டிட்டு இப்படி தான் அப்படின்னு live demo காட்டுறாரு. எனக்கு படம் பார்க்கும் பொழுது ரொம்ப பயமா போச்சிங்க.

அடுத்து எப்படியோ வில்லனோட மச்சானை கைது செஞ்சிடறாங்க, அவரை தப்பிக்க வெச்சி கூட்டிட்டு போக ஒரு 50-60 ரவுடிங்க சும்மா டூமில் டூமில்னு நடுரோட்டுல போலிசை எல்லாம் சுட்டுபுட்டு கூட்டிட்டு போறாங்க. ஊருல இருக்குறவங்க எல்லாம் கொஞ்சம் பார்த்து இருந்துகோங்க, இப்படி தெனமும் நடக்குற சண்டையில் நீங்க போயி மாட்டிகாதிங்க.

அடுத்த என்னானா ஒரு பத்து நிமிசத்துல நீதிமன்றத்துல விசாரணை முடிஞ்சி, தூக்கு தண்டனை குடுத்துடறாங்க அதுவும் அவருக்கு எதிரா சாட்சி சொல்ல யாருமே இல்லாத போதும். அதை விட பெரிய ஹைலைட்டு என்னானா தூக்கு தண்டனை குடுத்த மறு நிமிசம் அவரை தூக்குல போட்டுறாங்க. சே இந்தியாவின் நீதித்துறை இம்முட்டு வேகமா, புல்லரிச்சிப்போச்சிங்க (இது மாதிரி புல்லரிக்கும் காட்சிகள் நிறைய இருக்கு தனியா அதுக்கும் மருந்து வாங்க் தனியா வெச்சிகோங்க).

அடுத்த ஹைலைட்டு படத்தோட இறுதிக்காட்சியில ஒரு இடத்துல வில்லனுக்கு ஒரு டயலாக் விடுவாரு அதை கேட்டுட்டு வில்லன் இவரை கொல்லாம போயிடுவாரு சரி இம்சை முடிச்சிடிச்சிடா சாமியோவ் அப்படின்னு எஸ்கேப் ஆகலாம் அப்படின்னு பாத்தா அதுக்கு அப்புறம் சுமார் அரை மணி நேரம் படம் இருக்குது. படம் எப்ப முடியும் அப்படின்னு ஒரு திரில்லாவே இருக்கும் உங்களுக்கு.

அடுத்த ஹைலைட்டு சரியா பதினைந்து நிமிசத்துக்கு ஒரு தரம் படத்துல யாராவது ஒருத்தரு நம்ம கேப்டன் வந்து பிரச்சனையை தீர்க்கும் வரை அழுது ஆர்பாட்டம் பண்ணி ஒப்பாரி வெக்கிறாங்க. தாங்கலைடா சாமியோவ்.

படத்துல புல்லரிக்கு காட்சி இருக்குன்னு சொன்னே இல்லிங்களா அதுல ஒண்ணு நம்ம கேப்டனு ஒரு ஆப்ரேசன் செஞ்சிகிட்டே இருக்காரு டபால்ன்னு கரண்டு கட்டு ஆயிடுது. கூட இருக்குற டாக்டருங்க எல்லாம் டாக்டர் இன்னும் 5 செகண்டு தான் இருக்கு ஏதாவது பண்ணுங்கன்னு சொல்ல நம்ம ஆளு உடனே டக்குன்னு எல்லாருடைய மொபைல் போனையும் ஆன் பண்ண சொல்லி அந்த வெளிச்சத்துல அறுவை சிகிச்சையை முடிச்சி நோயாளியை காப்பாத்திடராரு (தலை முடியலை எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது எந்த ஹோட்டலில் ரூம் போட்டு இப்படி யோசிக்கிறீங்க). அப்புறம் முக்கியமான மேட்டரு heart weakஆ இருக்குறவங்க இந்த சீனை பாக்காம இருக்குறது நல்லதுங்க, ஏன்னா தலை அந்த நோயாளியை எப்படி காப்பாத்துவாருன்னு தெரியாம tensionஆகி ஒரு நாலு ஜந்து பேரு நெஞ்சி வெடிச்சி செத்து போயிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

ஹீரோயினை பத்தி சொல்றத்துக்கு பெருசா எதுவும் இல்லிங்க, வழக்கமா கேப்டன் படத்துல எப்படி ஹுரோயின் எல்லாம் லூசா இருப்பாங்களோ இதுலையும் அதே மாதிரி ஜோதிர்மயி. இன்னொரு ஹைலைட்டு என்னானா நம்ம மாளவிகா ஒரு பாட்டுக்கு ஆட்டத்தை போட்டுட்டு நம்ம தலை மேல தெரியாம மோதி அவரோட காந்தத்துல attractஆகி இன்னொரு முறை இடிங்கன்னு கேக்குறாங்க. அப்புறம் கேப்டனின் அரை பக்க டயலாக்கை கேட்டு என்னை விட்டுடு சாமியோவ் அப்படின்னு அவரை விட்டு ஓடிப்போறாங்க (நம்மால முடியலைங்க).

அப்பா மற்றும் தங்கை வழக்கம் போல இவரோட அருமை பெருமைகளை ஊர் முழுக்க சொல்லுவது அப்புறம் நம்ம ஹீரோவை பொங்கி எழச்செய்வதற்காக வில்லனால் கொலை செய்யப்படுகிறார்கள்.

படத்துல ஜஸ்வர்யா கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கி இருக்காங்க.

அப்புறம் கேப்டன் சார் தமிழ் மக்கள் மேல ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி. எலக்சன் நேரத்துல இந்த மாதிரி படத்தை எடுத்து வெளியே விட்டுடாதிங்க அப்புறம் உங்களுக்கு வோட்டு போடலாம் அப்படின்னு நினைச்சிகிட்டு இருக்குற கொஞ்ச பேரும் படத்தை பாத்து செத்து போயிடப்போறாங்க. அப்புறம் உங்களுக்கு தான் ஓட்டு நஷ்டம்.

176. ஒரு மார்கமாத்தான் திரியறாங்க

ஏப்ரல் 2, 2007

இன்னிக்கு யாரும் கவனிச்சிங்களா இல்லையான்னு தெரியலை, gmailயின் login பக்கத்தில் ஒரு விளம்பரம், அதாவது கூகுலில் ஒரு புது வசதி “Paper Archieve” இதன் மூலம் நீங்க சொல்லும் மெயில்களை இவர்கள் print செய்து உங்க முகவரிக்கு அனுப்புவாங்களாம.

Photo Sharing and Video Hosting at Photobucket

இதை பாத்துட்டு பங்களாலி மாப்புளே நாளைக்கு காத்தால முதல் வேலை என்னோட மொத்த inboxஜயும் print செஞ்சி வெச்சிகணும் அப்படின்னு சொல்றான். டேய் அதுல forward தவிர அப்படி என்னடா இருக்கு மொத்ததையும் print செய்ய அப்படின்னு நான் கேட்க, freeஆ குடுத்தா பினாயிலை மொத்தமா குடிக்கிற மொக்க மண்டையன் ஹிஹி இல்ல மச்சி அந்த service சரியா வேலை செய்யுதான்னு சரி பாக்கத்தான் அப்படிங்கிறான். அதுக்கு உடனே நானு மச்சி நம்ம ஏன் நம்ம இந்திய முகவரியை குடுத்து அங்க மொத்தையும் அனுப்பி பழைய பேப்பர் கடைக்கு போட்டு சுண்டல் வாங்கி தின்னக்கூடாதுன்னு அப்படின்னு சொல்ல. மூணு பேரும் ரூமுக்குள்ள ஒக்காந்து எம்முட்டு சுண்டல் வரும் அப்படின்னு மோட்டு வலையை பாத்து கணக்கு போட ஆரம்பிச்சோம்.

இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி ஒருத்தன் அமெரிக்காவின் அடுத்த கோடியில இருந்து ஒருத்தான் போன் போட்டு் மச்சான் தெரியுமாடா மேட்டரு, Google இப்ப புதுசா இலவச Internet சேவையை வழங்குறாங்களாம். Googleயும் உள்ளூர் முனிசிபாலிடியும் சேர்ந்து செப்டிக் டேங்க் தண்ணி வழியா இந்த இலவச சேவையை குடுக்குறாங்களாம்டா. உங்க வீட்டுல வருதான்னு போயி பாருடா, நம்ம பாலுவோட friend ஒருத்தன் californiaவுல அவன் வீட்ல வருதூன்னு சொன்னான், அப்படின்னு கொளுத்தி போட்டான். டேய் சும்மா ஊத்தாத செப்டிக் டேங்க் தண்ணியில நாத்தம் தான்டா வரும் Internet எல்லாம் வராதுன்னு நாங்க சொல்ல. உடனே அவன் ஏன் நீ எழுதுன program எல்லாம் bug இல்லாம production போகும் பொழுது இது மட்டும் ஏன் நடக்காது? அப்படிங்கிறான். சரி நான் சொன்னதை நம்பாட்டி இங்க போயி பாரு நல்லது சொன்னா நம்ப மாட்டிங்களே அப்படின்னு போனை வெச்சிட்டான்.

நாங்களும் எங்க வீட்டு டாய்லெட்டை போயி பாக்க, இதுலயாடா இம்முட்டு நாளும், ஆகா இதை கடைசியா எப்படா சுத்தம் பண்ணோம் அப்படின்னு நான் கேக்க மச்சான் நம்ப எங்கடா பண்ணோம் வீட்டுக்கு வரும் போது அவங்க பண்ணங்க நடுவுல நாத்தம் தாங்க முடியாம பக்கத்து வீட்டுகாரன் பல மாசம் முன்னாடி வந்து சுத்தம் பண்ணதோட சரி அப்படின்னு அவன் சொல்ல. இன்னொருத்தன் மச்சான் இம்முட்டு மோசமா இருந்தா சரியா signal வராதுடா அதை சுத்தம் பண்ணுவோம் அப்படின்னு இறங்கி சுத்தம் செஞ்சி முடிச்சோம். அப்புறம் தான் தெரிஞ்சது இது எல்லாம் கூகுலின் April Fool நிகழ்ச்சியின் ஒரு பகுதியாமுல்ல, நல்லா கொண்டாடுறாங்கடா april foolஜ.

175. BCCIல வேலை வேணுமா வேலை

மார்ச் 29, 2007

BCCI பற்றி தனியாக உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று இல்லை, உலகத்துலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம். நாட்டுல கிரிக்கெட்டை தவிர மத்த எல்லாத்துக்கும் பணத்தை வாரி இறைப்போம். கிரிக்கெட்டுக்கு சம்மந்தமே இல்லாதவங்க தான் இதன் Board of Members மற்றும் வீரர்கள். இது போன்ற ஒரு உலக பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் வேலை புரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம். அப்புறம் வரும் காலங்களில் அத்திப்பட்டி ‘A’ team, ஆட்டையாம்பட்டி ‘B’ team போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் முக்கியமான மேட்சுகள் இருக்கு எங்க கிட்ட வேலைக்கு சேர்ந்தால் ஒரு பிரகாசமான, Challenging எதிர்காலம் இருக்கு உங்களுக்கு.

பணியிடங்கள்

1. கேப்டன் (P-001)
2. துணை கேப்டன் (P-002)
3. பயிற்சியாளர் (P-003)
4. வீரர்கள் (P-004)

தேவையான தகுதிகள்

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றையேனும் கண்டுகளித்து இருக்க வேண்டும். முக்கியமாக இந்திய அணியை பங்களாதேஷ் போன்ற பலம் வாய்ந்த நாடுகள் நாயடி அடித்து தோற்கடித்த மேட்சுகளை கோபப்படாமல் பார்த்து இருக்க வேண்டும். தெரு முனை கிரிகெட்டிலோ, வீட்டுக்குள்ள விளையாடும் கிரிக்கெட்டிலோ இல்ல குறைந்த பட்சம் புக் கிரிக்கெட்டிலேயோ 65 ரன் அடித்து இருக்க வேண்டும் (சின்ன புள்ள தனமா ஒரு மேட்சிலயான்னு கேக்கப்படாது, பங்களாதேஷ் டீமுக்கு இங்க யாரும் ஆள் எடுக்கலை).

உங்களுக்கு கிரிக்கெட் தெரியாட்டியும் பரவாயில்லை டெண்டூல்கர், டிராவிட் இப்படி யாரையாச்சும் தெரிஞ்சி இருந்தால் போதுமானது.

மொத்த டீமும் 10 ரன்னுக்குள்ள அவுட் ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாம “ஹே தில் மாங்கே மோர்” அப்படின்னு மோர் குடிக்கும் அளவுக்கு Energetic Playerஆக இருப்பது அவசியம்.

கில்லி, கோலி, பம்பரம், மங்காத்தா, புட்பால், வாலிபால் தெரிந்து இருப்பது நலம், பயிற்சி காலத்தில் இவையே அதிகம் விளையாடப்படும்.

விளம்பர மாடல்கள், நடிகர்களுக்கு 150% இட ஒதுக்கீடு உண்டு.

நீங்க ஒரு சுற்றுலா பிரியராக இருக்க வேண்டும், முக்கியமாக பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் இடுவோர், உ.கோப்பைக்கு முன்னர் கோவா, மற்றும் இன்ன பிற சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்தோட சுற்றுலா செல்ல தயாராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

Batsman – மட்டையை நேராக பிடித்து நிற்க தெரியவேண்டும். கப்சி விளம்பரத்தை குறைந்த Retake உடன் முடித்து கொடுக்க வேண்டும்.

Bowler – ஒரு ஓவர் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படும், out side the off stick, offstick ஏரியாவில் எந்த பந்தும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பீல்டர் இருக்கும் இடத்துக்கு பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் பந்து போட தெரிந்து இருக்கணும்.

பொதுவான விதிமுறை – விளையாடி விட்டு ஆடுகளைத்தை விட்டு வரும் பொழுது சட்டை மற்றும் டவுசர் கசங்கியோ அல்லது மண்பட்டு அழுக்காகவோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் உடனடியாக தேர்வில் இருந்து நீக்கப்படுவார்கள்.

உங்களுடைய Resumeவை அனுப்ப வேண்டிய முகவரி callformodels@bcci.com. அனுப்பும் பொழுது email subject இல் பெயர்/பணியிடம்/தகுதி அனுப்ப வேண்டும் எ.கா தோனி/p-004/அடிச்ச மொத்த ரன் 12.

தேர்வு நடக்கும் இடம்

YMCA கால்பந்து மைதானம், நந்தனம் மற்றும் நடேசன் பூங்கா தி.நகர்

தேதி

01/04/2007 (ஒவ்வொரு உ.கோ முடிஞ்ச உடனேன்னு வெச்சிகோங்களேன்.)

படிக்க வேண்டிய புத்தகங்கள்

1. 30 நாட்களில் மாடல் ஆவது எப்படி – தோனி

2. புக்கிகளிடம் கொக்கி போடுவது எப்படி – ஜடேஜா

3. தோற்கும் மேட்சில் சென்சுரி அடித்து உலக சாதனை புரிவது எப்படி – டெண்டூல்கர்

4. எதுவுமே தெரியாம டீமுக்குல் இருப்பது எப்படி – அகர்கர்

சம்பளம்

விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் சில கோடிகள் தருவோம். அதுக்கு அப்புறம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை ஸ்பான்சரு அப்படி இப்படின்னு அதுல கொஞ்சம் தேத்தலாம், அப்புறம் புக்கிங்க வேற இருக்காங்க உங்க திறமையை பொருத்து அதுல ஒரு அமொண்டை பாக்கலாம்.

இந்த விளம்பரத்துக்கு ஸ்பான்சர் செய்தவர்கள்

1. மன்னார் & மன்னார் கம்பெனி
2. ஓட்டாரு செல்போன் கம்பெனி
3. கப்சி
4, அக்காமாலா
5. state bank of அத்திப்பட்டி

டிஸ்கி : இது மெயில் வந்த ஒரு மேட்டருங்க கொஞ்சம் மாத்தி இருக்கேன்.

172. நான் உன் இனம்டா

மார்ச் 23, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

நாங்க எல்லாம் நாக்கு சே வாக்கு தவற மாட்டோமுல்ல. சொன்னா சொன்ன மாதிரி வாழ்வோமுல்ல.

172, நாட்டு நலன் கருதி உ.கோ போட்டியில் இருந்து வெளியேறினோம்.

மார்ச் 23, 2007

உ.கோ போட்டியில் தோல்வி அடைந்ததுக்கான காரணத்தை கேட்ட பொழுது டிராவிட் கூறியதாவது ” இல்லிங்கண்ணா நாட்டுல எல்லாருக்கும் பரிட்சை நடக்குதுங்கண்ணா, எல்லாரும் கிரிக்கெட்டை பாக்குறேன்னு படிக்கிறதை விட்டுட்டு டிவி பெட்டி முன்னாடி உக்காந்து இருக்காங்க. இதனால் நாட்டுல கல்வியறிவு குறையுது எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்க வெளியேறிட்டோம்”

மக்கள் : மட்டையை புடிச்சி ரன் அடிக்கிறாங்களோ இல்லையோ? இதை செய்யுங்கடா சரியா.

161. ஆளை விடுங்க சாமியோவ்

பிப்ரவரி 23, 2007

அடாத டெலிகான்களாலும்(Telecons), வேலையாலும் அவதியுற்ற அண்ணன் கார்த்திக் ஜெய்ந்த்ஆளை விடுங்கடா சாமி அப்படின்னு கத்திக்கொண்டே சிகாகோ ஏர்போர்ட்டை நோக்கி அடாத பனியிலும் விடாமல் ஓடிக்கொண்டு இருப்பதாக ஒரு செய்தி வந்தது.

சிறிது நேரத்தில் என்னோட அடாத டெலிகான்கலுக்கு நடுவே ஒரு தொலைபேசி அழைப்பு நண்பா ஒருவழியா ஏர்போர்ட்டு வந்து சேர்ந்துட்டேன்டா பக்கத்து சீட்டில் நல்ல பிகர் உட்காரணும்டா சாமி கிட்ட வேண்டிக்கோ அப்படின்னு ஒரு கோரிக்கை வெச்சாரு நானும் வேண்டிக்கிட்டேன் (என்னான்னு கேக்க கூடாது அவன் ஊருக்கு போறான்னு எனக்கு பொறாமை எல்லாம் இல்ல சொன்னா நம்புங்கப்பா). ஆகவே இதை படிக்கிற பொதுமக்களும் இதையே வேண்டிகோங்க சாமியோவ்.

அண்ணனுக்கு இரண்டு மாசம் Bond குடுத்து இருக்காங்க. போயிட்டு ஒத்தையா வருகிறாரா இல்லை ரெட்டையா வருகிறாரா இல்ல மூணு பேரா (அட அப்பா அம்மாவை சொன்னேபா) இல்ல நாலு பேராக வருகிறாருன்னு (அட கல்யாணம் ஆயி பொண்டாட்டி, அப்பா,அம்மா. எதை சொன்னாலும் இப்படி தப்பாவே எடுத்துகிட்டா எப்படி?) தெரியலை.

ஊருல கட்-அவுட், தோரணம், தட்டி வெக்கிறவங்க எல்லாம் வெச்சிடுங்கப்பா. சும்மா தாரை தப்படைகள் எல்லாம் கிழியவேண்டும் ஆமாம் சொல்லிட்டேன்.ஆட்டோ ரெடி பண்றவங்க எல்லாம் பண்ணிவைங்க ஆண்ணன் ஒரு முடிவோட கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு..