Archive for the ‘நட்சத்திர வாரம்’ Category

ஏழு நாட்களில் முடிந்த 7 1/2

நவம்பர் 20, 2007

இவ்வுளவு தூரம் சொல்லியும், கேக்காம போன வாரம் முழுசும் நம்ம இம்சைக்கு நீங்க எல்லாம் பின்னூட்டம் போட்டு ஊக்கம் குடுத்தீங்க அதுக்கு ரொம்ப நன்றி. நேத்தே இந்த பதிவு போட வேண்டியது ஆனா சில தவிர்க்க முடியாத காரணத்தால போட முடியலை. உங்க ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.

எல்லா பின்னூட்டங்களுக்கும் என்னால பதில்/நன்றி சொல்ல முடியலை. அதுக்கு ஒரு தபா நீங்க மன்னிச்சிகோங்க.

நீங்க எல்லாம் இன்னொரு தபா என்னை மன்னிக்கனும், நான் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடியுது ஆனா பின்னூட்டம் மட்டும் போட முடியலை ஏன்னா பிளாக்கரை எங்க ஆபீசுல தடை செய்துட்டாங்க. பல நல்ல விவாதங்களில் பங்கு பெற முடியாம போகுது. படிக்க முடியாட்டியும் கூட பரவாயில்லிங்க ஆனாலும் முடியும் முடியாதுங்குற மாதிரி படிக்க முடியும் ஆனா பின்னூட்டம் போட முடியாதுங்கிறது ரொம்ப கொடுமைங்க. இன்னிக்கி கூட பாருங்க நம்ம வித்யா கலைவாணி மேடம் அமெரிக்காவை போட்டு தாக்கி இருக்காங்க, கை பர பரங்குது ஆனா பின்னூட்டம் போட முடியலை :(. அதே நிலைமை தான் சில பதிவுகளை சூப்பரா எழுதி இருப்பாங்க பாராட்டலாமுன்னு என்னையும் அறியாம கமெண்டைபோட முயற்சி செய்தால் “இந்த தளம் தடை செய்யப்பட்டுள்ளதுன்னு வரும் :((“. தொடர்ந்து நீங்க எல்லாரும் நீங்க ஆதரவு இதே மாதிரி ஆதரவு தர வேண்டும்.

கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை – பாகம் 1

நவம்பர் 17, 2007

கடன் அட்டைகள் (Credit Cards) இன்றைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளன (முக்கியமாக அமெரிக்க வாழ்க்கையில்). அதை கையாள்வது ஒரு தனி கலை. பெரும்பாலான கடன் அட்டை நிறுவனங்கள் இந்தியர்களை கண்டாலே மிரண்டு ஓடுகின்றனர். ஏன்னா நம்ம ஆளுங்க அதை நன்றாக கையாண்டு ஒரு பைசா கூட வட்டி கட்டாமல் அழகாக உபயோகிக்கின்றனர். கடன் அட்டைகளை கண்டாலே நடுங்கி அதை உபயோகம் செய்யாமல் இருப்பது முட்டாள்தனம் என்றே சொல்லலாம். அதை திட்டமிட்டு உபயோகித்தால பல பயன்பாடுகள் உண்டு நிறைய பலன்களை பெறலாம். கடன் அட்டைகளை பற்றி எனக்கு தெரிந்த வற்றை இங்கே விளக்க முற்படுகிறேன். முதலில் Credit History மற்றும் Credit Scoreஜ பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Credit History என்பது ஒரு நபரின் ஒரு குறிப்பிட்ட காலத்தின் செலவழிக்கும் திறன் அல்லது செலவழித்த முறையின் வரலாறு என்று கூறலாம். இந்த வரலாற்றை Credit Bureauக்கள் எனப்படும் கம்பெனிகள் பதிவு செய்கின்றன. Bad Credit History உருவாவதற்கான காரணங்கள் Bankrupsy, கடனை சரியான சமயத்தில் திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை.

Credit Score உங்களுடைய செலவழிக்கும் திறனை பொருத்து அமையும். Credit Score 300 முதல் 900 பாயிண்டுகள் வரை இருக்கலாம். இது ஒரு complex maths என்றே சொல்லலாம். உங்களுடைய credit score பல்வேறு காரணிகளால் தீர்மானம் செய்யப்படுகிறது.

Credit History மற்றும் Credit Scoreகளை பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.கடன் அட்டைகளில் பல்வேறு வகைகள் உண்டு (நான் அட்டைகளின் Benefitsஜ பொருத்து வகைப்படுத்தி உள்ளேன் சரியா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் திருத்திக்கொள்கிறேன்.) அவற்றை பற்றி பார்க்கலாம். பெரும்பாலானவை 0% APR on Purchases and Balance Transfer, Cash Back, Sky Miles, Bonus Points போன்றவை

1. 0% APR வகை அட்டைகளை பார்ப்போம்.

0% APR(Annual Percentage Rate) என்றால் நீங்கள் இந்த அட்டையை உங்கள் தினசரி தேவைக்காக உபயோகப்படுத்தும் பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி கட்ட தேவையில்லை(குறைந்த பட்சம் 6 மாதம்), ஆனால் அவர்கள் குறிப்பிடும் Minimum Payment Dueவை கட்ட வேண்டும் (பெரும்பாலும் மிகச் சொற்பமான தொகையாக இருக்கும்).
இதில் இன்னொரு வகை 0% APR on Balance Transfers, இதில் விஷேசம் என்ன வென்றால் இன்னொரு கடன் அட்டையில் இருக்கும் Balanceஜ அதாவது நீங்க வேறு கடன் அட்டைகளில் செலுத்த வேண்டிய தொகையை இந்த அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம், மேலும் அந்த தொகைக்கு அவர்கள் குறிப்பிடும் காலம் வரை வட்டி கட்ட தேவை இல்லை.
இன்னும் சில நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் காசோலைக்கும் இந்த மாதிரி வசதியை தருவார்கள்.
இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் உங்களின் Savings,Fixed deposit கணக்குகளுக்கும் பணத்தை transfer செய்து கொள்ளலாம்.

2. Sky Miles

இந்த வகை அட்டைகள் நீங்க சேகரிக்கும் புள்ளிகளை பொறுத்து இலவச விமான பயணம், free upgrade போன்ற வற்றை பெற்று தரும். இந்த வகை அட்டைகள் பெரும்பாலும் இலவசமாக கிடைக்காது வருடாந்திர கட்டணம் இருக்கும். சில அட்டைகள் முதல் வருடம் மட்டும் இலவசமாக இருக்கும் அது போன்ற அட்டைகளை வாங்கி உபயோகித்து பின்னர்
முதல் வருடம் முடிந்த உடன் cancel செய்து விடலாம்.

3. Points

இந்த வகை அட்டையில் நீங்க உபயோகிக்கும் அல்லது செலவு செய்யும் பணத்துக்கும் ஒரு புள்ளி இரண்டு புள்ளி என்று அளிப்பார்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை நீங்க அடைந்த பின்னர் அவர்கள் குறிப்பிடும் இலவச பொருட்களை நீங்க உங்களின் புள்ளிகளை உபயோகித்து பெற்றுக்கொள்ளலாம்.

4. Cash Back

இந்த மாதிரியான அட்டைகளின் மூலம் நீங்க செலவு செய்யும் பணத்தின் ஒரு பகுதியை (5% – 10%) என்று திருப்பி கொடுப்பார்கள். இவ்வகை அட்டைகளை நீங்க பெரிய பெரிய பொருட்கள் வாங்க உபயோகித்தால் எ.கா. Camera, Plasma TV போன்றவற்றை வாங்க உபயோகித்தால் பெரும் சேமிப்பாக இருக்கும்.

5. Secure Credit Card

இது ஒரு வகையான debit card என்றே கூறலாம். முதல் முதலில் Credit History இல்லாதவர்கள் இங்க வரும் பொழுது Credit Historyஜ வளர்க்க இது போன்ற அட்டைகள் உபயோகித்து வளர்த்து கொள்ளலாம். இந்த வகை அட்டைகளில் முதலில் நீங்க ஒரு தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும், பின்னர் அவர்கள் நீங்க முன்பணமாக கொடுத்த தொகைக்கு ஈடான Limit உள்ள ஒரு அட்டையை கொடுப்பார்கள் நீங்க அதை கடன் அட்டை போல உபயோகித்துக்கொள்ளலாம்.

இதை தவிர பலவகையான அட்டைகள் உண்டு உங்களின் credit history ஏதாவது ஒரு காரணத்தினால் மோசமான இருந்தால் அதை சரி செய்யும் வகையான அட்டைகள், credit scoreஜ மேம்படுத்த, மாணவர்களுக்கு என்றே பிரத்யோகமான அட்டைகள், அப்புறம் தொழில் செய்பவர்களுக்கு என்று பலதரப்பட்ட அட்டைகள் உண்டு.

நான் உபயோகித்த வரையில் American Express நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மிக நன்றாக உள்ளது. அது போல சேவையும் நன்றாக உள்ளது ஆனால் இவ்வகை அட்டைகளை அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதோ போல் Bank of America போன்ற ஒரு மோசமான வாடிக்கையாளர் சேவையை அமெரிக்காவில் பார்க்க முடியாது.
தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவையை பெற மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டும். நண்பனின் கடன் அட்டை தொலைந்து விட்டதை அவர்களுக்கு தெரிய படுத்தி அந்த அட்டையை deactive செய்ய நாங்க சுமார் 1 1/2 மணி நேரம் போனில் காத்து இருக்க வேண்டியாதாயிற்று. அதே போல் இவர்கள் aliens அதாவது அமெரிக்க பிரஜைகளை தவிர ஏனையோருக்கு கடன் அட்டைகள் தருவதை விரும்புவதில்லை(என்னுடைய credit score அருமையாக இருந்த பொழுதே இவர்கள் இருமுறை reject செய்து விட்டார்கள்.) .

என்னுடைய சாய்ஸ் எப்பொழுதுமே Cash Back offer உள்ள கடன் அட்டைகள் தான், அதற்கு பிறகு Sky Miles வகையான அட்டைகள், அதற்கு பிறகு தான் மற்ற வகை. இதன் அடுத்த பகுதியில் கடன் அட்டைகளை கையாளும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பற்றி சொல்கிறேன்.

லிப்டோ லிப்டு

நவம்பர் 16, 2007

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணும், ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில

1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.

2. அடிக்கடி சே காத்தே இல்லை அப்படின்னு சொல்லி, எங்க போச்சி காத்து அப்படின்னு நீங்க வெச்சிகிட்டு இருக்குற பர்ஸ், பை முதலியவற்றில் தேடுங்க. கூட்டம் கம்மியாவும், அடி வாங்க தெம்பு அதிகமாகவும் இருக்கும் பொழுது பக்கத்துல இருக்குறவங்க பையிலையும் காத்து இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்.

3. உள்ளே வருபவர்களை கைக்குலுக்கி, வரவேற்று நான் தான் இந்த லிப்டின் COO(Chief Operating Officer) என்று அறிமுகப்படுத்தி, உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள 100ஜ டையல் செய்யவும், அப்படின்னு சொல்லுங்க.

4. லிப்ட் போயிட்டே இருக்கும் பொழுது பூனையை போல, நாயை போல சவுண்டு வுடுங்க.

5. புதுசா உள்ள வருபவரை ஒரு மாதிரியாக பார்த்து, என்ன ஒரு மாதிரியா கெட்ட வாசனை வருதுன்னு சொல்லி, நாங்க எல்லாம் சாக்ஸை துவச்சி போடுவோமாக்குமுன்னு சொல்லுங்க.

6. ஒவ்வொரு தளத்தை லிப்ட் அடையும் பொழுதும், “லிப்டை போல சவுண்டு விட்டு, நீங்கள் நான்காம் தளத்தை அடைந்து இருக்கீங்க” அப்படின்னு சொல்லி, அந்த தளத்தின் பெருமையை எல்லாம் விளக்கலாம். முடிந்தால் அங்க இறங்க முற்படுபவரை இழுத்து பிடித்து, ஒரு டூர் கைடு போல விளக்கினால் உங்களது அன்றைய பொழுது இனிமையாக கழியும்.

7. லிப்டுகுள்ள இருக்குற போனை எடுத்து ஹலோ பெப்சி உமாவான்னு ஆரம்பிச்சி உங்களுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க.ஆனா தயவு செய்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடமுன்னு சொல்லிடாதிங்க, முடியலை அதை கேட்க கூட முடியலை.

8. என்னடா காத்தே வரலைன்னு சொல்லி அதுல இருக்குற “Stop” பட்டனை அழுத்துங்க.

9. நீங்க நிக்கிற ஏரியாவை சுத்தி ஒரு சின்ன வளையத்தை போட்டு, எங்க ஏரியா உள்ளே வராதேன்னு சொல்லுங்க.
10. உள்ளே யாருமே வராத பொழுது “டேய் அவன் தானே நீயி, உன்னைய வரவேணாமுன்னு சொன்னேனே ஏண்டா வந்த அப்படின்னு” சொல்லி அவரை உள்ள விடாதி மாதிரி ஸீன் போடுங்க.

11. லிப்டு ஒவ்வொரு தளத்துல நிக்கும் பொழுது அதை நிப்பாடி, லிப்டுல இருந்து ஓடிப்போயி தளத்துல இருக்குற ஏதையாவது ஒண்ணை தொட்டு மைபிரண்டு போல “மீ த பஸ்டுடூடூன்னு” சவுண்டு விட்டுகிட்டே லிப்டுக்குள்ள ஓடி வாங்க. இதை செய்யும் பொழுது ஒருவருக்கு மேல் இருப்பது நலம் அப்ப தான் ஒரு ரன்னிங்க ரேஸ் எபெக்டு வரும் (அப்படியே உங்க வேலை போனாலும் நீங்க மட்டும் தனியா வீட்டுக்கு போக மாட்டீங்க.).

உங்களுக்கும் இது மாதிரி நிறைய ஜடியாக்கள் தோன்றும் அதை எல்லாம் பின்னூட்டமா போடுங்க பாக்கலாம். சிறந்த பின்னூட்டத்துக்கு குசும்பன் பரிசு வேற குடுக்குறேன்னு சொல்லி இருக்காரு.

Its Not about the Bike — புத்தக விமர்சனம்

நவம்பர் 13, 2007

Lance Armstrong அப்படிங்கிற Cyclistஇன் சுயசரிதம் (Autobiography). உலகத்திலேயே மிகவும் கடினமான Tour De France , சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல ஏழு முறை வென்று இருக்காரு.  அதுவும் உலகத்தில் மிகவும் கொடிய நோயான புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவர்களால் பிழைப்பதற்கு மிகக்குறைவான (10%-20%) வாய்ப்பே உள்ள நிலையில், அதில் இருந்து போராடி மீண்டு  இந்த சாதனையை  செய்து உள்ளார். இந்த புத்தகம் அவர் நேயிக்கான அறிகுறி தென்படுவதில் இருந்து ஆரம்பித்து அவர் அந்த நோயில் இருந்து எவ்வாறு மீண்டு பல போட்டிகளில் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுகிறார் என்பதுடன் நிறைவு பெறுகிறது.

புத்தகத்தின் நடை விறு விறுப்பாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் மருத்துவ துறை சார்ந்த சொற்கள் மிகையாக தென்படுகிறது, இந்த நோய் காலத்தில் அவரது தாயின் பங்களிப்பை பற்றி அவர் சொல்லும் பொழுது எனக்கு மிகையாக தோன்றியது. எ.கா, என்னுடைய அம்மா பணிவிடுப்பு எடுத்து என்னை பார்த்துக்கொண்டார், எனக்கான உணவை தயாரித்து கொடுத்தார் முதலியவை, இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்த நமக்கு அவை சராசரியாக எல்லா தாயும் செய்யக்கூடியவை எனவே எனக்கு அப்படி தோன்றியது என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகத்தில் நான் ரசித்த இன்னொரு பகுதி அவர் நோயூறுவதற்கு முன்னர் அவரை ஸ்பான்சர் செய்ய வந்த பல கம்பெனிகள், அவருக்கு நோய் என்று தெரிந்த உடன் எப்படி பின் வாங்கின என்பதும். நண்பர்கள் அவருக்கு எப்படி உதவி செய்தனர் என்று சொல்லுவது. இறுதியில் ஒரு இடத்தில் சொல்லி இருப்பார், இந்த நோய் வந்தது ஒரு விதத்தில் நல்லது தான், என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல நண்பர்களை அது இனம் காண உதவியது. இந்த நோய் மட்டும் வராவிட்டால், நான் இவ்வுளவு தூரம் போராடி இது போன்ற வெற்றிகளை பெற்று இருப்பேனான்னு சந்தேகம் அப்படின்னு அவர் சொல்லி இருப்பது.

புற்று நோய் என்பது ஒரு கொடிய நோய் என்று நமக்கு தெரியும். அதை விட கொடுமையானது அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சை என்பதனை இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். அவர் அந்த நோய்க்கு அளிக்கப்படும் பெரும்பாலான சிகிச்சைகளை விளக்கமாக கூறியுள்ளார். சில சிகிச்சைகளை கேட்கும் பொழுது எதிரிக்கு கூட இந்த நோய் வரக்கூடாது என்று நமக்கு தோன்றும்.

அனு மேடம் அந்த நோயினால் அவதிப்படுகிறார், அவரும் அந்த நோயைப்பற்றியும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி  இங்கே  எழுதுகிறார்.

புற்று நோயினால் அவதிப்பட்ட Lance Armstrong, அந்த நோயினால் அவதிப்படுபவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதைப்பற்றி மேலும் அறிய  இங்கே சொடுக்கவும்.  

 இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த பல நல்ல விஷயங்களுல் மிகவும் முக்கியமானது இவருடைய தன்னடக்கம் தான்.  தன்னுடைய நுரையீரலில்( lungs என்றால் நுரையீரல் தானே?) உள்ள ஒரு கூடுதல் வசதி, அதாவது மற்றவர்களை விட இவரது நுரையீரலால் கூடுதலாக காற்றை சேமிக்க முடியுமாம்,  இயற்கையின் இந்த வரப்பிராதத்தால் பல போட்டியில் வெற்றி பெற்று உள்ளார் என்று கூறி இருக்கிறான். மேலும் தன்னுடைய அணியிள் இருக்கும் சக அணியினரும் தன்னுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவி புரிந்து, பல வெற்றிகளை சாத்தியமாக்கி உள்ளனர் என்று கூறியிருப்பது.  

இதை படித்த எனக்கு பல விஷயங்கள் தெரியவந்தது. அதில் முக்கியமானது, தனி நபர் சைக்கிள் பந்தயத்தின் பொழுதும், ஒரு குழுவாக கலந்து கொண்டு, அதில் அந்த குழுவில் உள்ள ஒவ்வொருவரும், ஒரு குறிப்பிட்ட நபரின் வெற்றிக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்கின்றனர் என்று.  ஒரு போட்டியில் பங்கு பெற சைக்கிளின் எடை, அவரும் உடுத்தும் உடையின் எடை முதல் கொண்டு பல நுணுக்கமான பொருட்களின் பங்களிப்பு எவ்வுளவு முக்கியம் என்று அருமையாக சொல்லி இருக்கிறார். ரொம்ப நாள் கழித்து நான் படித்த ஒரு நல்ல புத்தகம் படிச்சித்தான் பாருங்களேன் உங்களுக்கும் பிடிக்கும்..

எவன்டா இங்க சந்தோசு?

நவம்பர் 13, 2007

நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான்.  நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி  ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது பொதுவா எல்லாருக்கு சனி புடிக்கும் இவன் சனியை புடிச்சிகிட்டான்.

ஒரு நாள் இவன் தண்ணியடிச்சிட்டு இருக்கும் பொழுது என்ன பாத்து “உனக்கு டென்னிஸ் விளையாட தெரியுமான்னு கேட்டாங்க?”. அதுக்கு நான் “எது! அந்த வடை சுடுற கரண்டியை ஆளுக்கு ஒண்ணு எடுத்துகிட்டு ஒரு கிழிஞ்சிபோன மீன் வலைக்கு இந்த பக்கமும் அந்த பக்கமுமா நின்னுகிட்டு, பந்தை தட்டிகிட்டு இருப்பாங்களே அதுவா? சே சே அது எல்லாம் ஒரு விளையாட்டா” அப்படின்னு கேட்டேங்க. அதுக்கு அவன் டேய் என்னோட 25 வருச பொது வாழ்க்கையிலையும் சரி பத்து மாச தனிபட்ட வாழ்க்கையிலும்  டென்னீசுக்கு இந்த மாதிரி ஒரு விளக்கம் சொல்லி கேட்டது இல்ல அப்படின்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டான்.

இந்த விளக்கதை கேட்ட பிறகாவது அடங்குவான் அப்படின்னு பாத்தா அவன் விடவில்லை. மச்சி “அமெரிக்கா வந்து நயாக்ரா பாக்காம போனா எம்முட்டு அசிங்கமோ அதே மாதிரி டென்னீஸ் விளையாடம போனா அசிங்கம்” அப்படின்னு சொன்னதோட, நான் Atlantaவுல ஒரு seeded player உன்னை Roger federar (அய்யோ பாவம் இது யார் பெத்த புள்ளையோ, விஷயம் தெரிஞ்சா அவரோட பெயரை மாத்தி வெச்சிகுவார்) ஆக்கி காட்டிட்டு தான் மறுவேலை அப்படின்னு சொன்னான். சரி குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சி அப்படின்னு பாத்தா.

அடுத்த நாள், ரெண்டு வடை கரண்டியோட வந்து நிக்கிறான். நானும் என்னடா கரண்டியோட நிக்கிற, ஏதாவது கல்யாண வீட்ல வேலை பாக்க போறீயா?  அப்படின்னு கேட்டேன். அவன் டென்ஷனாகி டேய் இதுக்கு பெயர் “Racquet” அப்படின்னு ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிசம் மொக்கையை போட்டான். வழக்கம் போல நமக்கு ஒண்ணும் புரியலை ஆனாலும் அவன் மொக்கைக்கு பயந்து சரி சரின்னு புரிஞ்ச மாதிரி மண்டையை ஆட்டிடேன்.

சரி வா கோர்டுக்கு போகலாமுன்னு சொன்னான், டேய் இப்ப என்ன ஆகிப்போச்சின்னு கோர்டுக்கு கூப்புடுறே, எங்கப்பா நான் கோர்டுக்கு போனது தெரிஞ்சா அவ்வுளவு தான் கொன்னே போட்டுவாரு. எதுனாலும் பேசி தீத்துகலாம் கோர்டு எல்லாம் வேணாமுன்னு சொன்னேன். அடசே அறிவுகெட்ட முண்டம்(உனக்கும் அது தெரிஞ்சி போச்சா?) டென்னீஸ் கோர்டுக்கு போவலாம் வான்னு கூட்டிகிட்டு போனான்.

அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அவனுக்கு சனி, தனி ஆளாக 8 set ஆடுற ஆளு என் கூட ஒரு 30 நிமிசம் விளையாடினதுல களைச்சிப்போயிட்டான். அதுவும் அந்த 30 நிமிசத்துல நான் அடிச்ச ஒரு பந்தை கூட அவனால தொட முடியால, எப்படி நம்ம திறமை(ஹிஹி.. பந்து கோர்டுக்குள்ள இருந்தா தானே தொட முடியும்.). இப்படியே ரெண்டு நாள் போச்சி தாங்காதுடா சாமி அப்படின்னு மூணாவது நாளில் பந்து எடுத்து போட ஒருத்தனை கூட்டிகிட்டு வந்தான், அதுக்கு அடுத்த வாரத்துல பாத்தா இன்னும் ரெண்டு பேர் அடடா என்னை சமாளிக்க நாலு பேரா அப்படின்னு புல்லரிச்சி போயிட்டேனுங்க.அப்புறம் என்னோட திறமையான ஆட்டத்தை பார்த்து வழக்கம் போல என்னைய பந்து எடுத்து போடவும், கை தட்டவும் (கிரிக்கெட் நியாபகத்துல பந்து வெளியே போகும் போது விசில் அடிச்சி திட்டு வாங்குனது வேற விசயம்) யூஸ் பண்ணிகிட்டாங்க.

கொஞ்ச நாள் கழிச்சி ஒரு வெள்ளைக்காரன் கோர்டுக்கு வந்து “எவன்டா இங்க சந்தோசு” (டைட்டிலை சொல்றதுக்குள்ள ஸ்ப்ப்ப்ப்பாஆஆ முடியலை…) அப்படின்னு சவுண்டு விட்டான். சரி நம்ம திறமையை பாத்து நம்மளை அடுத்த U.S Open பைனலுக்கு டைரக்டா விளையாட கூப்புடறாங்களோன்னு நினைச்சி நான் தான்னு சொல்ல வாய் எடுத்தேன். அதுக்குள்ள பின்னாடி இருந்து ஒரு சவுண்டு “எவன் அடிச்சா பந்து நெட்டையும் தாண்டாம கோர்டுக்குள்ளாரையும் இல்லாம இருக்கோ அவன் தான் சந்தோசுன்னு” அப்படின்னு, யாருடா அது நம்ம திறமையை இப்படி வெட்ட வெளிச்சம் ஆக்குறதுன்னு பாத்தா நம்ம ராஜ்.

அப்புறம் தான் தெரிஞ்சது அட்லாண்டாவுல முதல் பத்து இடத்துல இருந்த அவன் எனக்கு சொல்லி தர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வேகமா வளர்ந்து 50வது இடத்துக்கு போயிட்டானாம். அந்த வெள்ளைக்காரன் வேற யாருமில்ல அவனோட கோச் தான், ஒரே மாசத்துல அவன் வாழ்க்கையில இம்முட்டு பெரிய மாற்றத்தை செய்ததை யாருன்னு தெரிஞ்சிக்க ஒரு கொலை வெறியோட வந்து இருக்காரு. நம்ம திறமைக்கு இதெல்லாம் சாதாரணமப்பா என்ன சொல்றீங்க?

“இந்தியன் வங்கியில்” ஒரு நாள்

நவம்பர் 12, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காசோலையை என்னுடைய வங்கி கணக்கில் போட எங்க ஊரில் உள்ள இந்தியன் வங்கிக்கு (Indian Bank) சென்றேன்.  நான் கணக்கை ஆரம்பிக்கும் பொழுது அந்த வங்கி கணினி மயம் ஆகவில்லை ஆனால் இப்பொழுது அது கணினி மயமாகி விட்டது. அதனால் என்னுடைய கணக்கு எண் மாறிவிட்டது.  பழைய எண்ணை காட்டி புது எண் என்ன என்று ஒரு அதிகாரியிடம் கேட்டேன், அவர் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவரை காட்டி அங்கே போயி கேட்கச்சொன்னார். அவரிடம் கேட்க அவர் அடுத்தவரை கை காட்ட, அவரிடம் கேட்க முதலில் நான் கேட்டவரை நோக்கி கை காட்டினார்.

எனக்கு வந்து கடுப்புக்கு ஒரு அளவே இல்லை.சரி இவனுங்களிடம் கேட்டால் ஆவாது அப்படின்னு பழைய எண்ணை போட்டு அவனிடம் கொடுத்தேன்(காசு வாங்கிட்டு வேலை செய்யாத நாய்க்கு என்ன மரியாதை? ).அதை பார்த்து விட்டு, செக்கையும், டெபாசிட் சிலிப்பையும் பின் செய்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னான். நான் சொன்னேன் இல்லிங்க என்னிடம் பின் இல்லை உங்களிடம் இருந்தால் கொடுங்கள் என்று. அதுக்கு ஆமாய்யா எல்லாத்தையும் இங்க வந்து கேளு போ போயி உங்க வீட்ல வாங்கிட்டு வா இல்லாட்டி கடையில் வாங்கிட்டு  அப்படின்னு எரிந்து விழுந்தான். நான் கோபத்தின் உச்சிக்கே சென்று, பின் மட்டும் போதுமா இல்ல கம்யூட்டர் முதல் கொண்டு எல்லாத்தையும் எடுத்துகிட்டு வந்து உங்க கிட்ட காட்டி நாங்களே அப்டேட் செய்ய வேண்டுமா? அப்படின்னு கேட்டேன்? அப்புறம் எங்களுக்குள் வாக்கு வாதம் நிகழ்ந்து. வங்கி முழுவதும் (வங்கியின் மேளாலர் முதல் கொண்டு) அதை வேடிக்கை பார்த்தனர்.
பின்னர் அவன் எழுந்து விட நான் அடுத்த கவுண்டரில் போயி கேட்க அவனும் சார் பின் வேண்டும் என்று கேட்க. அவனை நான் திட்டப்போக அதற்குள், வங்கியில் வேலை செய்யும் அப்பாவின் நண்பர் வந்து எங்களை சமாதானம் செய்து அழைத்துச்சென்றார். ஆக மொத்தம் அந்த வங்கியில் வேலை செய்யும் அந்த இரண்டு அலுவலர்களும் கடைசி வரையில் யூனியன் அமைத்துக்கொண்டு அந்த காசோலையை கணக்கில் போடவில்லை.

நான் ஒரு NRI என்று தெரிந்த பிறகு அந்த மேனாஜர் என்னை அவரது அறைக்குள் அழைத்து சென்று பேசிய பேச்சு என்ன அழகு அட அட… அட நாயிகளா அந்த டாலர் தாள்களுக்கு இருக்கும்  மரியாதை ஒரு மனிதனுக்கு கிடையாதா? படித்த மக்களிடமே இந்த அழிச்சாட்டியம் செய்யும் இவர்கள் படிக்காத மக்களை எப்பாடு படுத்துவார்கள்? இதற்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா?  இதுவே ஒரு தனியார் வங்கியில் நடக்குமா? இந்த நாய்களை தட்டிக்கேட்பதை விட அந்த மேளாலருக்கு என்ன வேலை? வேலை போகாது என்ற தைரியத்தில் எல்லாரையும் மதிக்காமல் இருக்கும் இது போன்ற அதிகாரிகளுக்கும் ஏதாவது தண்டனை கிடைக்குமா தெரியவில்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா சாமி தமிழ்மண தர்மகத்தாவே, நீங்க ஆள் தெரியாம எனக்கு அனுப்பி இருந்தாலும் பரவாயில்லை இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன், நான் தான் அந்த வாரத்துல நட்சத்திரமா இருப்பேன்னு அவங்க யோசிக்கிறதுக்கு கூட டைம் குடுக்காம கெட்டியா புடிச்சிகிட்டேன். 

அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து என்ன என்னத்தை எல்லாம் எழுதி பெருமை சேர்த்து இருக்காங்க. எனக்கு என்னத்தை தெரியும் சொல்லுங்க, நான் என்னாத்தனு எழுத முடியும்? இருந்தாலும் விடுவோமா?

அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது. பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ரைட்டு விடுங்க, இம்முட்டு சொல்லியும் என் பேச்சை கேக்காட்டி என்ன பண்றது, சோலிய முடிச்சிட வேண்டியது தான், இதுக்கு மேல உங்க தமிழுக்கு என்னால உத்திரவாதம் குடுக்க முடியாது, நம்மளோட அடுத்த மீட்டிங்கு டைரக்டா ரத்த பூமியில தான் வரட்டா.